விசுவாசத்தையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டதுதான், இறைவனிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும் பக்தி என்ற உன்னத வழி.
நமது கர்ம வினைகளின் விளைவுகளைத்தான், ஒவ்வொரு நிகழ்வாக, நம் வாழ்க்கையில் இன்பமாகவும்... துன்பமாகவும்... அனுபவித்து வருகிறோம். இன்பத்தை அனுபவிக்கும் போது, அந்த அனுபவத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். அதுவே துன்பங்களை அனுபவிக்கும் போது, அந்த அனுபவங்கள், நம்மை மீறி, நம மீது திணிக்கப்படுவதாக எண்ணி, துன்பத்தில் ஆழ்கிறோம்.
இன்பத்திற்கும், துன்பத்திற்கும், நமது வினைகளே காரணம்... என்ற ஞானம் வந்து கூடும் போதுதான்... அந்த இரண்டு அனுபவங்களையும், நாம் சமமாகப் பார்க்கக் கற்றுக் கொள்கிறோம். இந்த ஞானம்தான் நம்மை 'பிரார்த்தனை' என்ற உன்னத வழிக்கு இட்டுச் செல்கிறது.
பிரார்த்தனை என்பது, நமது ஆசைகளையும்... விருப்பங்களையும்... நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு வழி... என்ற அபிப்பிராயம், நம்மிடையே நிலவி வருவதை மறுக்க முடியாது. ஆனால், ஒன்றை ஊன்றிக் கவனித்தால், நமது வாழ்க்கைப் பாதையில், நமது 'தேவைகள்' அனைத்தும் தாமாகவே பூர்த்தியாவதும்... ஆசைகளும், விருப்பங்களும் எப்பாடு பட்டாலும் பெரும்பான்மையாக பூர்த்தியாகாமல் போவதையும்... கவனிக்க முடியும். இறுதியில், தேவைகள் அனைத்தும் 'விதிக்கப் பட்டதாகவும்'... ஆசைகள், விருப்பங்கள் அனைத்தும் 'விதிக்கப் படாததாகவும்... இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
தாமாகவே பூர்த்தியாகும் தேவைகள் எவை...? நமது கர்ம வினைகளின் விளைவுகளுக்கு ஏற்ப பூர்த்தியாகும் ஆசைகளும், விருப்பங்களும் எவை...? என்ற பகுத்து அறியும் விவேகம் ஏற்பட்டால்தான்... பிரார்த்தனை என்ற உன்னத வழியில் ஆனந்தமாகப் பயணிக்க முடியும்.
இந்த விவேகம் என்ற ஞானம் பிறக்கும் போது... நமது பிரார்த்தனை கீழ் கண்டவாறு அமைந்து விடும்.
'இறைவா...! எனது வாழ்க்கைப் பாதையில் எனக்கான கடமைக்கான நேரம் இது. இந்த நேரத்தில், இந்தக் கடமையை நான் பூர்த்தி செய்யாவிடில்... அது இன்னுமொரு பிறவிக்கு வழி வகுத்துவிடும். என்னைக் கருவியாக்கி, இந்தக் கடமையை பூர்த்தி செய்து, என்னை, எனது கர்ம வினைக் கட்டுகளில் இருந்து விடுவித்து விடுங்கள் சுவாமி...!'
பக்தி வழியின் சூட்சுமமான ஊன்று கோல்தான், பிரார்த்தனை என்ற யுக்தி.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment