Wednesday, November 18, 2020

தமிழுக்கும் அமுதென்று பேர்... !

                                        

                         

'தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'


கவிஞர் பாரதிதாசன் அவர்களின் அமுத வரிகள்தாம் இவை. 

அமுதம் என்ற சொல், என்றும் நிலைத்திருப்பதையும், மாறாத இளமையையும், தன்னைத்தான் புதுப்பித்துக் கொள்வது என்ற நிலைத்த பண்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த பாரத தேசத்தைப் புண்ணிய பூமி என்று அழைக்கிறோம். பாரத தேசத்து மக்கள் தங்களது வாழ்வை, என்றும் நிலைத்திருக்கும் ஆன்மீகத்துடன் இணைந்து வாழ்ந்ததால்,  'தர்மம் ஒன்றே தலையானது... என்று தமது வாழ்வை அமைத்துக் கொண்டனர்.

தென்னகமாம் தமிழகம், இந்த ஆன்மீக வாழ்வுக்கு எடுத்துக்காட்டாக ஆன்மீகம்,  பண்பாடு, கலை, இலக்கியம் என்ற அனைத்தையும் தன்னுள்ளே கொண்டு, இந்த பாரத தேசத்தின் பழம் பெருமைகளை அன்றும்... இன்றும்... என்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. இவற்றிற்கெல்லாம் மூலமாக இருப்பது நமது தாய் மொழியாம் தமிழ்தான். அந்தச் செம்மொழியைத்தான் 'அமுதம்' என்று வருணிக்கிறார் பாரதிதாசன்.

தாய்க்கும் சேய்க்கும் இடையேயான பந்தம், பிரிக்க முடியாத... நிலைத்த.. என்றும் தொடரும் முதல் உறவு.. என்பதை, தாயையும், சேயையும் இணைக்கும் 'தொப்பூள் கொடியே' உறுதிப் படுத்துகிறது. அது போலத்தான் தாய் மொழியின் உறவும்.

தமிழ் மொழியாம் செம்மொழிக்கு இருக்கும் சிறப்பு, தமிழ் மொழி வெறும் பேச்சு மொழி மட்டுமல்ல... ஆன்மீகச் செழுமை, பண்பாடு, கலைகள், இலக்கியங்கள் என, இவைகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்ட, எழுது மொழியாக, பூரண இலக்கண விதிகளைத் தன்னகத்தே கொண்ட மொழியாகத் திகழ்வதுதான்.

ஆன்மீகத்துடன், தமிழ் மொழி இணைந்திருப்பதற்கு, அதன் எழுத்து வடிவ இலக்கணங்களே சாட்சியாக அமைந்திருக்கிறது. 

ஆன்மா என்ற நிலைத்த தன்மையே, இந்த ஜீவனின் இருப்புக்குக் காரணமாகிறது. ஜீவன் என்ற உயிர்ப்புத் தன்மையே, இந்த உடலுக்குக் காரணமாகிறது. 

'ஆன்மா - ஜீவன் - உடல்' என்ற இந்த முக்கூட்டுக் கலவையை, நமது மொழி பிரதிபலிப்பதை அதன் எழுத்து வடிவ இலக்கணம் உறுதி செய்கிறது. ஆன்மாவை, 'மெய்யெழுத்துக்களும்'... ஜீவனை, 'உயிரெழுத்துக்களும்'... உடலை, 'உயிர் மெய்யெழுத்துக்களும்'... பிரதிபலிக்கிறது.

இந்த முக்கூட்டுத் தன்மையால்தான், என்றும் நிலைத்திருக்கும் பண்பையும்... மாறாத இளமையையும்... தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் வல்லமையையும்... பெற்று 'அமுதம்' என்ற சொல்லால் அலங்கரிக்கப்படுகிறது.

அதனால்தான், கவிஞர் பாரதிதாசன்...

'தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'... என்று வருணித்திருக்கிறார்.

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...