Saturday, May 23, 2020

COVID-19... ஒரு சிந்தனை...





இது போல் என்றும் நிகழ்ந்ததில்லை - நம்
வாழ்வில் என்றும் கண்டதில்லை.
நம்மை நாமே உணர்ந்து கொள்ள - ஒரு
வாய்ப்பும் இது போல் கிடைத்ததில்லை.

இறைவன் கொடுத்த சுதந்திரத்தை - தன்
உரிமையாய் நினைத்த மனிதகுலம்
அனைத்து உயிர்க்கும் உரிமையான - இவ்
உலகைச் சிதைக்க முனைந்தது.

வானம் பூமி இணைந்திட்ட - இந்த
புவியை நாசம் செய்தது.
வானம் இயல்பை இழந்தது - அதன்
வெளியில் கதிரியக்கம் சூழ்ந்தது.

புவியிலிருந்து எழுந்த மாசு - விண்
வெளியை கரியால் நிறைத்தது.
மலைகள் சிதைந்து போனது - அதன்
வளங்கள் தொலைந்து போனது.

காடுகள் மரங்களை இழந்தது - வெறும்
தரிசு நிலமாய் ஆனது.
கடலின் நீரும் மேகத்து மழையும்
மலையின் அருவியும் ஏரியும் குளமும்
கிணறும் குட்டையும் நிலத்தடி நீரும் - பிற
உயிரினம் வாழ வழியில்லாமல் போனது.

தனக்கே மட்டும் இவ்வுலகம் - என்ற
தப்புக் கணக்கால் சகலமும் அழிந்தது.
இயற்கையும் உயிர்களும் -ஒன்றாய்த்
தொடுத்த வழக்கின் தீர்ப்பும் வந்தது.

ஒட்டுமொத்த உலகின் மனிதம் - நான்கு
சுவர்களுக்குள்ளே சிறைபட்டுப் போனது.
வெளியேறா வண்ணம் வீட்டுக்கு - வெளியே
கண்ணுக்குத் தெரியா கிருமி காவல் செய்தது.

இதன் விளைவு...

வானம் பூமி இணைந்திட்ட - இந்தப்
புவி புத்துணர்வைப் பெற்றது.
வானம் இயல்புக்கு வந்து - அதன்
கதிரியக்கம் காணாய்ப் போனது.

புவியின் மாசு குறைந்து போனதால் - வான்
வெளியின் தூய்மை முழு நிறைவானது.
மலைகள் காடுகள் தளிர்த்து வளர்ந்து - பெரும்
மரங்களால் வனம் இருள் சூழ்ந்தது.

கடலின் அருவியின் ஏரியின் குளத்தின்
கிணற்றின் குட்டையின் நிலத்தடி நீரின்
தூய்மை மீண்டது, உயிரினம்
யாவற்றின் துயரமும் போனது.

இறைவன் அளித்த தண்டனைக் காலம் - மனிதம்
மீண்டும் தளைக்கத்தான்...
படைத்தவன் அளித்த சுதந்திரம் - பற்றிய
ஞானம் மீண்டும் பிறக்கத்தான்.

ஸாய்ராம்.








No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...