'நான் யார்... ?' என்று விசாரி... ! என்று பகவான் கூறியதுமே... எண்ணற்ற கேள்விகள்தான் மனதில் எழுகின்றன.
இதே நிலையில்தான்... பால் பிராண்டன் என்ற வெளி நாட்டவரின் நிலையும் இருந்தது. அவரின் இந்திய வருகை, ஒரு சத்குருவின் நேரடி தரிசனத்தைத் தேடித்தான் இருந்தது. அது கல்கத்தாவில் ஆரம்பித்து காஞ்சி மண்ணில் முடிந்தது.
காஞ்சிபுரத்தில், நடமாடும் தெய்வமான... காஞ்சி மகா முனிவரை சந்தித்தார். அவரின் சன்னிதானத்தில் நிறைவோடு இருந்த பிராண்டன்... ஆத்ம ஞான விசாரத்தைப் பற்றிய சந்தேகங்களை கேள்விகளாகத் தொடுக்க வேண்டும்... என்று எண்ணும் போது... அவரின் சிந்தனை ஓட்டத்தை நன்கறிந்த 'பரமாச்சாரியார்' புன்னகைத்த படியே, 'உன் கேள்விகளுக்கான பதில்... திருவண்ணாமலையில் இருக்கிறது. அங்கு சென்று ரமணரை தரிசனம் செய்... !' என்றறுளினார்.
பிராண்டனின் அடுத்த பயணம், திருவண்ணாமலையை நோக்கியதாக அமைந்தது. அங்கு வந்து 'ரமண மகிரிஷியைச்' சந்தித்த கணமே... பிராண்டனின் அனைத்து சந்தேகங்களும் ஒரு முடிவுக்கு வந்தது. பகவானின் தீர்க்கமான பார்வையும்... அவரின் மௌனமும்... எப்போதும் உள்ளார்ந்து இருக்கும் அவரின் தவமும்... கேள்விகளை விடுத்து... பிராண்டனின் மனதை உள் நோக்கி செலுத்துவதற்கு ஏதுவாகியது.
அவரின் முதல் வருகை... குறுகியதாக இருந்தது. பகவானைப் பேட்டி காண சந்தர்ப்பமும் மிகக் குறைவாகவே இருந்தது. இருப்பினும், மிகவும் சிரமப்பட்டு, ஒரு மதிய வேளையில், யாரும் அருகில் இல்லாத பொது... ஒரு மொழிப் பெயர்ப்பாளரை அருகில் வைத்துக் கொண்டு, தனது கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.
அவரின் கேள்விகளையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த பகவான்... 'இந்தக் கேள்விகளைக் கேட்பவர் யார்... ?' என்று கேட்டார். அந்தக் கேள்வியின் நுட்பத்தைப் புரிந்து கொள்ளாத பிராண்டன், 'என் பெயர் பிராண்டன்.' என்றார். 'அது உனக்கு இடப்பட்ட பெயர்...' என்றார் பகவான்'. நான் ஒரு எழுத்தாளன்' என்ற பிராண்டனிடம்... 'அது உனது தொழில்...' என்றார் பகவான். 'நான் பிரிட்டனைச் சேர்ந்தவன்' என்ற பிராண்டனிடம்... 'அது உனது பிறந்த தேசம்...' என்றார் பகவான்.
பகவானது கேள்விக்குத் தான் அளித்த பதில்களும்... அதைத் தொடர்ந்த பகவானின் விளக்கங்களும்... 'தான் இந்த உடம்பு அல்ல' என்ற உண்மையை பிராண்டனுக்கு உணர்த்தியது. இந்த உணர்தல்... அடுத்த ஒரு நீண்ட திருவண்ணாமலை விஜயத்திற்கு வழிகாட்டியது.
இந்த இரண்டாவது விஜயம்... பகவானின் பேட்டிக்காக அல்ல... தன்னை உணர்வதற்காக. அந்த உணர்தலின் வழியில் பகவானால் வழி நடத்தப்பட்ட பிராண்டனின் அடுத்த கேள்விகளெல்லாம்... 'நான் யார் என்ற விசாரத்தின்' வழியேயான கேள்விகள்தான்.
அதில் ஒன்றுதான், 'மனதை அதன் மூலத்தில் கொண்டு சேர்த்து... அந்த மூலத்தையே கவனிக்கும் போது... எண்ணங்களற்ற மனம் இருக்கும். அந்த நிலையில் எனது வாழ்வு என்னவாகும்...?' என்பதுதான்.
இந்த கேள்விகளெல்லாம்... சாதகன் மனதில் விசாரத்தின் பொது உருவாவதுதான்... என்பதை உணர்ந்து கொண்ட பகவான்... புன்னகைத்த படியே, 'தேவைக் கேட்ப எண்ணங்கள் உருவாகும்... !' என்றார்.
இதுதான்... விசாரத்தின் விளைவு. தியானத்தின் வெற்றி.
ஓம் ஸ்ரீ ரமணாய நமஹ... !
ஸாய்ராம்.

No comments:
Post a Comment