பகவான் கிருஷ்ணருடன், நாரத மகிரிஷி தேரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, 'பகவானே... ! கர்மவினை அவ்வளவு வலிமை மிக்கதா... என்ன.. ?' என்றொரு கேள்வியை முன்வைத்தார்.
பகவான், சாரதியின் பக்கம் திரும்பி, 'கொஞ்சம் தேரை நிறுத்தி... குதிரைகளுக்கு ஓய்வு கொடு... !' என்று சாரதிக்கு உத்தரவிட்டுவிட்டு, ஒரு குவளையை எடுத்து, நாரதரிடம் கொடுத்து, 'நாரதா... ! தாகமாக இருக்கிறது. அதோ அங்கு தெரியும் நீர் நிலையிலிருந்து குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வருகிறாயா... ?' என்றார். 'தாராளாமாகப் பிரபு... !' என்ற படி, குவளையை வாங்கிக் கொண்டு, அந்த நீர் நிலையை நோக்கி நடந்தார் நாரதர்.
நீர் நிலையில் தேங்கியிருந்த நீர் கலங்கியிருக்கவே... சற்று தொலைவிலிருக்கும் ஒரு குடிசையை நோக்கி நடந்த நாரதர், அந்தக் குடிசைக் கதவைத் தட்டினார். 'இதோ வருகிறேன்... !' என்ற மென்மையான குரலுடன்... ஒரு அழகிய பெண் வந்து கதவைத் திறந்தாள். அது போன்ற ஒரு பேரழகியை இதுவரைக் கண்டிராத நாரதர்... அவளின் அழகில் மயங்கி... தான் எதற்காக வந்தோம் என்பதையும் மறந்து போனார்.
அந்த அழகியின் வதனமும் நாணத்தால் சிவந்தது. மணந்தால் இது போன்ற பெண்ணைத்தான் மணந்து வாழ வேண்டும்... என்ற மோகம் நாரதரை ஆட்கொண்டது. 'பெண்ணே... ! நான்தான் நாரத மகிரிஷி. உன்னை மணந்து கொள்ள விரும்புகிறேன். சம்மதிப்பாயா... ?' என்று கேட்டார்; சம்மதத்துடன் தலை அசைத்த பெண், 'ஆனால், எனது தந்தையின் சம்மதத்தை நீங்கள் பெற வேண்டும்.' என்றாள். அவளது தந்தையும் வந்து சேர, 'ஐயா,,, நான் தேவலோகத்தைச் சேர்ந்தவன். நாரத மகிரிஷி எனது பெயர். நான் தங்களது புதல்வியை மணந்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு உங்கள் சம்மதத்தை நாடி நிற்கிறேன்.' என்றார்.
'சம்மதிக்கிறேன் மகிரிஷி. ஆனால், ஒரு நிபந்தனை... நீங்கள் எங்களோடு இங்கேயே வசிக்க வேண்டும்' என்றார். மோகத்தால் ஆட்கொண்ட நாரதர் சம்மதம் என்று தெரிவிக்கவே, அவருக்கு திருமணம் நடந்தேறியது. இல்வாழ்வின் இன்பத்தை அனுபவித்த்ருக் கொண்டிருந்தவருக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளும் பிறந்தன. அவர்களுக்குச் சொந்தமான தோட்டத்திலும், வயல் வெளியிலும், உழைத்த நேரம் போக மனைவி, குழந்தைகள் என... ஒரு மகிழ்வான வாழ்வை வாழ்ந்து வந்தார்.
தனது மனைவியின் பெற்றோர்கள் மறைவிற்குப் பின்னால்... குடும்பப் பொறுப்புகளைச் சுமந்து கொண்டு... ஒரு குடும்பத் தலைவனாக வாழ்வை நடத்திக் கொண்டிருந்தார். ஒரு நாள், பெரும் மழை பொழிய ஆரம்பித்தது. நிற்காமல் பெய்த மழையால், அந்தப் பகுதியே வெள்ளக் காடாய் மாறியது. இவர்களுக்குச் சொந்தமான தோட்டம்... வயல் வெளி... என அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட... தனது குடும்பத்தைக் காக்க, தனது மனைவி , குழந்தைகளுடன் குடிசையின் மேல் பகுதியில் ஏறி பாதுகாப்பாக அமர்ந்து கொண்டார்.
நிற்காமல் பெய்த மழையாலும்... வீசிய பெரும் காற்றாலும்... வெள்ளம் பெருகி, அந்த குடிசையையும் மூழ்கடிக்க ஆரம்பித்தது. மேலேறி வந்த வெள்ளத்தால் தனது கண்முன்னேயே தனது மனைவி அடித்துச் செலவதைப் பார்த்து கதறியவர்... குழந்தைகளைக் காத்துக் கொள்ள... குழந்தைகளைத் தன் தோள்களில் தூக்கிக் கொண்டு எழுந்து நின்றார். எங்கிருந்தோ பெருகி ஓடி வந்த ஒரு பெரு வெள்ளம்... தனது அன்புக் குழந்தைகளைத் தன் கைகளின் பிடியிலிருந்து இழுத்துக் கொண்டு செல்வதை உணர்ந்த நாரதர், துயரம் தாங்காமல். 'ஐயோ... ! இறைவா, எனது குழந்தைகளையாவது காத்துவிட மாட்டாயா... ?' என்று அலறினார்.
'நாரதா... ! இன்னுமா தண்ணீரை குவளையில் நிறைத்துக் கொண்டிருக்கிறாய்.? என்ற குரலைக் கேட்டு, இன்னும் தான் அனுபவித்த அந்த மோகவலைப் பின்னலின் அனுபவத்திலிருந்து விடுபடாததால், 'பகவானே... ! எவ்வளவு காலமாக நான் இவ்வாறு துன்பத்தில் உழன்றிருந்தேன்... /' என்று நாரதர் கேட்க... ஏதுமறியாதவர் போல கிருஷ்ண பகவான், 'நாரதா... என்ன சொல்கிறாய்... / தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால்... நானே வந்து தாகம் திர்த்துக் கொள்ளலாம் என்று... இப்போதுதான் தேரிலிருந்து இறங்கி வருகிறேன்.' என்றார்.
இந்தச் சொற்ப க்ஷணத்தில் தான் அனுபவித்த மோகத்தின் விளைவின் வலிமையைக் கண்டு... திகைத்துவிட்ட நாரத மகிரிஷி, 'இறைவா... ! க்ஷண நேரத்தில் நான் அனுபவித்த இந்த 'வாழ்க்கைத் துன்பத்தையே' என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லையே... பிறவிகள் தோறும்... தொடர்ந்து இந்தக் 'கர்ம வினைகளின்' வலைப்பின்னலில் சிக்கித் தவிக்கும் ஜீவர்களின் நிலைதான் என்னே... !' என்று வியந்து போனார்... நாரத மகிரிஷி.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment