Tuesday, May 26, 2020

கர்ம வினைகள்... என்ற சுமக்க முடியாத சுமை...





'நாராயண... நாராயண...' என்று எப்போதும் ஸ்மரித்துக் கொண்டிருக்கும், நாரத மகிரிஷிக்கு, தான்தான் 'பகவான் நாரயணரது' முதல் பக்தன் என்ற பெருமையும்...தன்னையறியாமலேயே ஒரு கர்வமும்... வந்து சேர்ந்தது. அதை ஒரு நாள் ஒரு கேள்வியாக பகவானிடம் முன் வைத்தார் நாரதர். அது, 'பகவானே என்னை விட... உங்களின் மீது சிறந்த பக்தி கொள்ளும் பக்தன்... இந்த ஈரேழு லோகங்களிலும்... யாராவது இருக்கிறார்களா... ?' என்பதுதான்.

புன்னகைத்த பகவான், 'நாரதா... நீ ஒரு சிறந்த பக்தன் அதில் சந்தேகமே இல்லை. அனால், உன்னை விட ஒரு சிறந்த பக்தன், பூலோகத்தில் இருக்கிறான்.' என்றார். தனது கர்வத்தின் மேலீட்டால், 'பூலோகத்திலா... அவ்வாறு ஒருவர் இருக்க முடியாது, பகவானே. நானே நேரில் சென்று அவனை பரிசோத்து வந்து, நான்தான் உங்களது பக்தர்களில் சிறந்தவன் என்று நிரூபணம் செய்கிறேன்.' என்று கூறிவிட்டு, பகவான் குறிப்பிட்ட அந்த பகதரைத் தேடி பூலோகத்திற்கு வந்து சேர்ந்தார்.

வானத்திலேயே சஞ்சரித்து வந்தவரின் கண்களில் பகவான் குறிப்பிட்ட பக்தரின் வீடும் வந்து சேர்ந்தது. இரவு நேரமானதால், அந்த வீட்டிற்கு அருகிலேயே மறைந்து நின்ற நாரதர், அந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். அதிகாலையில் அந்த வீட்டின் தலைவரான விவசாயி கண் விழித்தான். கயற்றுக் கட்டிலிலிருந்து எழுந்து அமர்ந்து... கைகளைச் சேர்த்து தேய்த்து தன் கண்களில் வைத்து... பின் கைகளைப் பார்த்த படியே... 'நாரயணா...!' என்றான். 'ஆஹா...!' இவனைத்தான் பகவான் சிறந்த பக்தன் என்று கூறியிருக்கிறார்... என்ற படி அவனையே தொடர்ந்து கண்காணிக்க ஆரம்ப்த்தார் நாரதர்.

கண்விழித்ததற்குப் பின்னர், மாடு, கன்றுகளை அவிழ்த்துவிட்டு... பட்டியைச் சுத்தம் செய்து...மனைவி கொண்டு வந்த நீராகாரத்தைக் குடித்து விட்டு... ஏரையும், காளைகளையும் அழைத்துக் கொண்டு... காடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவனையெ தொடர்ந்தார் நாரதர். காட்டை அடைந்ததும்... காளைகளை ஏரில் பூட்டி... சூரிய வெப்பம் கூடுவதற்கு முன்னதாக... மடைகளில் நீரைத் திறந்து விட்டபடி... நிலத்தை சீராக உழ ஆரம்பித்தான்.

மதிய நேரம் வந்த போது... அவனது மனைவி சுமந்து வந்த நீராகாரத்தைக் குடித்து விட்டு நிழலில் ஓய்வெடுத்தபின்... மிண்டும் வயலில் வேலைகளைத் தொடர்ந்தான். மாலை நெருங்கியதும், ஏரைச் சுமந்தபடி காளைகளுடன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். வீடு வந்து சேர்ந்த பின் காளைகளையும், விட்டிலிருக்கும் மாடு, கன்றுகளையும் அவிழ்த்து விட்டு... அவற்றிற்கு ஆகாரம் அளித்து... அவற்றைக் கட்டிப் போட்டான்.

மீண்டும் கயற்றுக் கட்டிலை எடுத்து வீட்டு வாசலுக்கு முன் போட்டவன்... மனைவி கொண்டு வந்த சூடான களியை உண்டு... நீரருந்தி விட்டு... வழக்கம் போல கைகளைத் தேய்த்து கண்களில் ஒற்றி... கைகளைப் பார்த்துக் கொண்டே... 'நாரயணா...!' என்ற படியே தூக்கத்தில் ஆழ்ந்தான். இரண்டு முறைகள் மட்டுமே பகவானை நினைக்க முடிந்த ஒரு சாதாரண பக்தனை... எப்போதும் பகவானது நாமத்தையே ஸ்மரித்துக் கொண்டிருக்கும் தன்னோடு ஒப்பிட்டதை நினைத்து... வருந்திய நாரதர்... இந்த உண்மையை உரைக்க வைகுண்டம் நோக்கிச் சென்றார்.

இவரது வருகைக்காகக் காத்திருந்த பகவான், 'நாரதா... உனக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன். உன்னைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாத ஒரு காரியம் உள்ளது. அதை உன்னால்தான் செய்ய முடியும் . இதோ, இந்த குடம் நிறைய நெய் நிறைந்திருக்கிறது. இதிலிருந்து ஒரு சொட்டு நெய் கூட சிந்திவிடாமல்... இந்த வைகுண்டத்தை ஒரு சுற்று சுற்றி வா... !' என்றார்.

தான் சொல்ல வந்ததை... பகவானின் புகழுரையால் மறந்து போன நாரதர், அந்த நெய் குடத்தை சுமந்தபடி... மிகக் கவனமாக வைகுண்டத்தைச் சுற்றி வர ஆரம்பித்தார். அவரது கவனம் முழுவதும் நெய்க் குடத்தின் மீதே இருந்தது. மிகவும் சாமர்த்தியமாக, ஒரு சொட்டு நெய் கூடச் சிந்தாமல், புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தார் நாரதர். அப்போதுதான் அன்றைய நாளே பூர்த்தியாகியிருப்பதை அவர் உணர்ந்தார்.

நாரதரை, சிந்தாத நெய்க்குடத்துடன் பார்த்த பகவான், 'சபாஷ்... நாரதா... ! உன்னையன்றி யாரால் இந்த காரியத்தை இவ்வளவு கட்சிதமாக முடிக்க முடியும்... !' சரி, நாரதா.. இந்தப் பணியை ஆரம்பித்து, முடிக்கும் வரையில் என்னை எத்தனை முறை நினைத்தாய்... ?' என்று கேட்டார். அதிர்ந்து போன நாரதருக்கு, அப்போதுதான், தனது சிந்தனை முழுவதும் நெய்க்குடத்தின் மீது இருந்ததால்... பகவானை ஒரு முறை கூட சிந்திக்காதது நினைவுக்கு வந்தது. ஆனாலும், 'பகவானே, நீங்கள் எனக்கு ஒரு கடமையைக் கொடுத்திருந்தீர்கள். அதனைப் பூர்த்தி செய்ய நான் எடுத்த முயற்சியினால்தான்... உங்களை நினைக்க முடியாத சூழல் ஏற்பட்டது..' என்றார்.

சிரித்துக் கொண்டே... பகாவான், 'நாரதா... பூலோகத்தில் நீ பார்த்துக் கொண்டிருந்த மனிதன் எத்தனைக் கடமைகளைச் சுமந்து கொன்டிருந்தான்... ! அவ்வாறு இருந்தாலும்... கண்விழிக்கும் போதும்... கண்ணயரும் போதும்... இருமுறை என்னை அழைத்தானே...! அவன்தானே சிறந்த பக்தனாக இருக்க முடியும்... !' என்றார்.

தனது அகங்கார நிலையிலிருந்து வெளி வந்த நாரதர், 'பகவானே... ! என்னை மன்னித்து அருளுங்கள். 'இத்தனை பிறவிகளின் கர்ம வினைகளைச்' சுமந்து கொண்டிருக்கும் பூலோக மாந்தர்களின் மிகச்சிறிய பக்தியும்.. பெரும் பக்திக்குச் சமம்... என்பதை உணர்ந்து கொண்டேன்... என்றார்.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...