திருவரங்கனின் வீதி உலா. எருது... குதிரை... யானை... முரசுகள்... பதாகைகள்... ஒளி வீசும் பந்தங்கள்... அரையர்கள்... வேதம் ஓதும் பாவனர்கள்... கட்டியம் கூறுவோர்... என அனைவரும் வரிசையாகக் காத்திருக்க... அரங்கன் கோவிலிலிருந்து புறப்பட்டு... ஆலயத்தின் முகப்பு வாசலுக்கு வந்து சேர்ந்தார். எண்ணற்ற பக்தர்கள், ஆலயத்தின் வாயிலில் அரங்கனின் புறப்பாட்டுக்காகக் காத்திருந்தனர்.
ஸ்ரீ ராமானுஜர் அப்போதுதான் சிஷ்யர்கள் புடை சூழ... அரங்கனின் தரிசனத்திற்காக வந்து கொண்டிருந்தார். அரங்கனின் புறப்பாடும் ஆரம்பமானது. முரசுகள் ஒலிக்க... அரையர்களின் திவ்யப் பிரபந்த சேவையும்... வேதியர்களின் வேதமோதும் நாதமும்...காற்றின் வெளியை நிறைக்க... அரங்கன் பல்லக்கில் ஏறி... ராஜ நடையாக திருவீதி உலா வந்தார்.
அனைவரின் கண்களும் அரங்கனின் மீது இருக்க... ஒருவரின் கண்கள் மட்டும், தனக்கு அருகில் இருக்கும் ஒரு அழகிய பெண்ணின் கண்களிலேயே நிலைத்திருந்தது. அந்த நபர், அந்தப் பெண்ணின் மீது மாலை நேரத்து வெயில் கூட விழாதவாறு... குடையைப் பிடித்துக் கொண்டும்... அந்தப் பெண்ணுக்கு வியர்வை வீசா வண்ணம் விசிறி வீசிக்க் கொண்டும் இருந்தார்.
அவரின் செய்கையை நோக்கி... அனைவரின் கண்களும் திரும்ப... அது அரங்கனின் வீதி உலாவுக்கு ஒரு தடையாக இருப்பதைக் கண்ட ஆச்சார்யார்... ஒரு சிஷ்யனை விட்டு, அந்த நபரை அழைத்துவரச் சொன்னார். தன்னிடம் வந்து வணங்கி நின்றவனிடம், 'என்னப்பா... அனைவரும் பார்க்கும் படியாக... அந்தப் பெண்ணிடம் நீ அதீத சிரத்தையைக் காட்டுகிறாயே... அப்படியாக உன்னை ஈர்த்தது என்ன... ?' என்று கேட்டார். அதற்கு, 'சுவாமி... அந்தப் பெண்ணின் கண்களின் அழகில்... நான் மயங்கி விட்டேன். அது போன்ற அழகிய கண்களை நான் இதுவரை எங்கும் கண்டதில்லை...' என்றான்.
ஆச்சார்யார், ' சரியப்பா... அந்தக் கண்களை விட அழகிய கண்களை நான் உனக்குக் காட்டிவிட்டால்... நீ இந்த மோகத்திலிருந்து விடுபட்டு விடுவாயா... ?' என்று கேட்டார். 'சுவாமி... அப்படி ஒரு கண்கள் இருந்தால் எனக்குக் காட்டுங்கள் சுவாமி... ! அப்போது பார்க்கலாம்...' என்றான். 'நாளை காலை இங்கு வந்து விடு. நான் உனக்கு அந்தக் கண்களைக் காட்டுகிறேன்' என்றார் ராமானுஜர்.
அடுத்தநாள் காலையில், அந்த நபரை, அரங்கனின் தரிசனத்திற்காக அழைத்துச் சென்றார் ஆச்சார்யார். அரங்கனின் தரிசனத்தை பட்டாச்சார்யார்... தனது கையில் தீபத்தைத் தூண்டிவிட்டு... பாதம் முதல் கேசம் வரையிலும்... கைகளில் சங்கு... சக்கரம்... எனக் காட்டி... மெதுவாக தீபத்தை அரங்கனின் திருமுகத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்.
அங்கு என்ன நடந்தது என்பது... அரங்கனுக்கும் அந்த பக்தனுக்கும்தான் தெரியும். அரங்கப் பெருமானின் கண்களின் பேரொளியால் ஈர்க்கப்பட்ட பக்தன்... அன்று முதல் அரங்கனின் பக்தனாகவும்... ஆச்சார்யாரின் அத்யந்த சீடர்களிலும் ஒருவனாகவும்.. ஆனான்.. அந்த நிகழ்வை அந்தப் பெண்ணிடமும் கூற... அந்தப் பெண்ணும் அரங்கனின் தரிசனத்தையும்... ஆச்சார்யாரின் கருணை மழையிலும் நனைந்து... திருவரங்கத்திலேயே வந்து தங்கி... அரங்கனுக்கும், ஆச்சார்யருக்கும் சேவை செய்து வாழ்ந்தனர்.
அந்த பக்தர்தான்... உறங்காவில்லி தாஸர் என்ற பெருமகனார்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment