'கிருத யுகத்தில்'... வாழ்ந்த அனைவருமே தர்மத்தின் வழியேயான வாழ்வைத்தான் வாழ்ந்தனர். 'திரேதா யுகத்தில்'... 'மூன்றில் ஒருவர்' தர்மத்திலிருந்து விலகினர். 'துவாபர யுகத்தில்'... 'நான்கில் இருவர்' தர்மத்திலிருந்து விலகினர். தற்போது நடக்கும் 'கலியுகத்தில்'... 'நான்கில் மூவர்' தர்மத்திலிருந்து விலகுகிறார்கள்.
இதற்கு ஆதாரமான கதை... 'மஹாபாரதத்தில்' இருக்கிறது.
போரெல்லாம் முடிவுக்கு வந்து... பாண்டவர்கள் இராஜ்ஜியத்தில் அமர்ந்து... ராஜபரிபாலனம் செய்து கொண்டிருந்த நேரம். ராஜ்ய சபையில்... அரியாசனத்தில் தர்மர் வீற்றிருக்க... பகவான் கிருஷ்ணருடன் பஞ்சபாண்டவர்களும் சூழ இருந்த நேரம்.
அன்றைய நாளில் சபைக்கு ஒரு வழக்கு வந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும் வந்திருந்தனர். வழக்கை தர்மர் விசாரித்தார். அதில், ஒருவர் தனக்குச் சொந்தமான ஒரு நிலத்தை மற்றொருவருக்கு விற்றிருந்தார். நிலத்தை வாங்கியவர் அந்த நிலத்தை உழும்போது... அதிலிருந்து 'ஒரு புதையல்' கிடைத்தது.
அதை எடுத்துக் கொண்டு நிலத்தை விற்றவரிடம் சென்று, நிலத்தைதான் தான் வாங்கியதாகவும்... நிலத்திற்குள் இருக்கும் அந்தப் புதையல் தனக்குறியது அல்லவென்றும் கூறி... அந்தப் புதையலை விற்றவரிடமே கொடுத்தார். ஆனால், நிலத்தை விற்றவரோ... எப்போது நிலத்தை விற்றாரோ... அப்போதே அதிலுள்ள அனைத்தும் வாங்கியவருக்கே சொந்தமாவதால்... அதிலிருந்து எதுவும் தனக்குத் தேவையில்லை... என்று மறுத்துவிட்டார்.
இந்த வழக்குதான்... அன்றைய தினம் சபைக்கு வந்தது. வந்திருந்த இருவரின் தர்ம சிந்தனைகளையும் நினைத்து மனம் மகிழ்ந்த தர்மருக்கு... இந்த வழக்கிற்கு எவ்வாறு தீர்ப்பு சொல்வது... என்பதில் ஒரு தீர்மானம் எடுக்க முடியாத நிலையில்... ஏனைய சகோதரர்களிடமும் விவாதித்தார். இறுதியாக, கிருஷ்ண பகவானிடம்... 'இதற்கு எவ்வாறு தீர்ப்பு சொல்வது... கிருஷ்ணா... !' என்று கேட்க, பகவானோ, 'தர்மா... இதற்கு நாளை தீர்ப்பு சொல்வதாகக் கூறி... இந்த வழக்கை ஒரு நாள் தள்ளி வை... !' என்றார்.
அன்று இரவும்... தர்மர் தூக்கமின்றி... அடுத்தா நாள் வரப்போகும் அந்த வழக்கிற்கு எவ்வாறு தீர்ப்பு சொல்வது... என்ற எண்ணத்திலேயே இருந்தார். அடுத்தா நாள், சபைக்கு வந்த போது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவருமே சபைக்கு வந்திருந்தனர். அதில், நிலத்தை வாங்கியவர், 'அரசே... நான் நேற்று முழுவதும் யோசித்துப் பார்த்தேன். நிலத்தை விற்றவர் சொல்வது சரியாகப் பட்டது. அந்த நிலமும்... அதற்கு உள்ளடங்கிய புதையலும்... எனக்குத்தான் சொந்தம்... என்பது உறுதியானது. ஆதலால், அந்தப் புதையலை நானே எடுத்துக் கொள்கிறேன்...!' என்றான்.
நிலத்தை விற்றவரோ, 'அரசே, நான் நிலத்தைதான் அவருக்கு விற்றேனே தவிர... நிலத்திற்கு உள்ளே உள்ளதையல்ல. ஆதலால், நேற்று அவர் ஒத்துக் கொண்டபடி அந்தப் புதையலை... அவர் என்னிடம் ஒப்படைத்து விடுவதுதான் நியாயம்... !' என்றான்.
ஒரே நாளில்... அந்த இருவரின் தர்மமும் மாறிப் போனதைக் கண்டு... குழம்பிய தர்மர், கிருஷ்ண பகவானிடம், 'பகவானே... ஒரே நாளில் எவ்வாறு இப்படி இருவரின் மனநிலையும் மாறிப் போனது... ! எனக்குப் புரியவில்லையே... !' என்றார். அதற்கு பகவான், 'தர்மா... நேற்று 'துவாபர யுகத்தின்' இறுதி நாள்... அதனால், இருவரும் தர்மத்தின் வழியே இருந்தனர். இன்று, 'கலியுகத்தின்' முதல் நாள்... இதன் ஆரம்பத்திலேயே... இருவரும் தர்மத்திலிருந்து விலகி விட்டனர்... என்றார்'.
மேலும், 'இப்போது இந்த வழக்கிற்கான தீர்ப்பு... எவ்வாறு இருக்க வேண்டும்... என்பது உனக்குப் புரியுமே... !' என்றார். தர்மத்தைவிட்டு எப்பொதும் வலுவாமலிருக்கும் தர்மர் தனது தீர்ப்பை அளித்தார். அதுதான், அப்போதும், இப்போதும்... தொடர்கிறது.
அந்த தீர்ப்பு... ' இப்போதிருந்து, மண்ணிற்குக் கீழிருக்கும் அனைத்தும்... அரசுக்குச் சொந்தமாகும்.' என்பதுதான்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment