Sunday, May 17, 2020

எண்ணங்களின் வலிமை...





ஒரு ஞானி தினமும் கடற்கரையின் அமைதியான பகுதியில் அமர்ந்து கொண்டு தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது இருப்பு அங்கிருக்கும் எந்த பறவைகளுக்கும் தொந்தரவு இல்லாத நிலையில்... அனைத்து  பறவைகளும் அவருக்கு அருகே பயமற்று உலவத் தொடங்கின.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன்... தினமும் இந்தக் காட்சியை தூரத்தே இருந்து ஆவலுடன் பார்த்துக் கொண்டிருப்பான். தான் கொஞ்சம் அந்தப் பறவைகளை நெருங்கினாலே... அந்தப் பறவைகள் சிதறி ஓடிப் பறப்பதையும்... ஆனால், அத்துனைப் பறவைகளும் ஞானிக்கு மிக அருகிலேயே ஆனந்தத்துடன் இருப்பதையும் கண்ட சிறுவனுக்கு... இது மிகவும் ஆச்சரியத்தை விளைவித்தது.

ஓர் நாள், தியானத்தை பூர்த்தி செய்து விட்டு கடற்கரையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த ஞானியிடம்... இந்தச் சிறுவன் தயங்கித் தயங்கி அருகே வந்து... 'ஐயா... ! உங்களிடம் நான் ஒன்று கேட்கலாமா... ?' என்றான். அவனை புன்சிரிப்புடன் நோக்கிய ஞானி, 'சொல்லப்பா... உனக்கு என்ன வேண்டும்... ?' என்று கேட்டார். 'என்னைக் கண்டவுடனேயே பறந்து போய் விடும் பறவைக் கூட்டங்கள்... உங்களருகே வந்து... ஆனந்தமாக உலவிக் கொண்டிருக்கிறதே அது எப்படி ஐயா... !' என்று கேட்டான்.

சிறுவனின் கேள்வியைக் கேட்டு ரசித்த ஞானி, 'அப்பா... ! நீ சொல்வதை இப்போதுதான் நான் கவனிக்கிறேன். எனது கவனமெல்லாம் தியானத்தில்தான் இருந்தது... என்னைச் சுற்றியல்ல...' என்றார். ஞானியின் பதிலில் உள்ள சூட்சுமத்தை அறிந்து கொள்ளாத சிறுவன், 'ஐயா, எனக்கு அந்தப் பறவைக் கூட்டத்திலிருந்து... ஒரு பறவையை மட்டும் பிடித்துத் தர முடியுமா... ?' என்று கேட்டான்.

சிறுவனின் ஏக்கத்தை உணர்ந்து கொண்ட ஞானி, 'சரி... நாளை வா... உனக்கு ஒரு பறவையைப் பிடித்துத் தருகிறேன். ஆனால் அதை பத்திரமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.' என்றார். மிகவும் மகிழ்ச்சியுடன், 'நன்றி ஐயா...!' என்றான் சிறுவன்.

அடுத்த நாள் மாலை வேலையில் கடற்கரைக்குச் சென்று... தியானத்தில் அமரந்த ஞானியின் மனதில்... சிறுவனின் வேண்டுதல் ஒலித்துக் கொண்டே இருந்தது. கண்களை முடினால்... மனம் ஒருமைப்படவில்லை. சிந்தனை தன்னைச் சுற்றியே இருந்தது. அடிக்கடி கண்களைத் திறந்து தன்னைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே இருந்தார். எப்பொதும் தன்னைச் சுற்றி இருக்கும் பறவைக் கூட்டங்களில்... ஒரு பறவை கூட தன்னருகே வராததைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்.

தனது மனதில் உதிக்கும் எண்ணங்களின் பிரதிபலிப்பின் வலிமையை உணர்ந்து... அதனை மீண்டும் ஒருமைப்படுத்த முயற்சித்தார். ஆனால், அன்றைய தியான முயற்சியில் தோல்வியே விளைந்தது. தனக்காகக் காத்துக் கொண்டிருந்த சிறுவனிடம் வந்து, 'அப்பா... ! பறவைகள் சுதந்திரமானவை. அதைக் கூண்டில் அடைத்து வளர்ப்பதை... அந்தப் பறவைக் கூட்டங்கள் விரும்பவில்லை. இதைத்தான், உன்னிடம் அவைக் கூறச் சொன்னன.' என்றார்.

அடுத்த நாள், ஞானி வளக்கம் போல தியானத்தில் ஈடுபட்டார். தூரத்தே இருந்த பார்த்துக் கொண்டிருந்த சிறுவன், ஞானியைச் சுற்றிலும் பறவைக் கூட்டங்கள் எப்போதும் போல சுற்றியிருந்து மகிழ்ந்திருக்கும் காட்சியை... இப்போது எந்த ஆச்சரியமும் இன்றிப் பார்த்தான்.

ஸாய்ராம்.

2 comments:

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...