ஒரு செல்வந்தரிடம்... நிறைந்த குடும்பம், வீடு, வயல் வெளிகள், தோப்புக்கள், வண்டி வாகனங்கள்,,, என்ற அனைத்து வசதிகளும் நிறைந்து இருந்தன. ஆனாலும் அவரின் மனம், எப்போதும் ஒரு கவலையிலேயே ஆழ்ந்திருந்தது.
அந்தக் கவலையிலிருந்து விடுபட, அவர், ஒரு வழியைத் தேடிக் கொண்டிருந்தார்.
அந்த ஊருக்கு ஒரு ஞானி வந்திருந்தார். அவர் ஊருக்கு வெளியே இருந்த ஒரு மரத்தடியில் எப்போதும் தியானத்தில் மூழ்கியிருந்தார். அவரிடம் சென்ற செல்வந்தர், ஞானி சற்று கண்விழித்த போது அவரை வணங்கி நின்றார். ஞானியும் அவரிடம், 'யாரப்பா நீ... ? உனக்கு என்ன வேண்டும்... ?' என்று கேட்டார்.
'சுவாமி... ! என்னிடம் அனைத்து செல்வ வளங்களும் நிறைவாக உள்ளது. இருந்தாலும் எனது மன்தில் கவலை சூழ்ந்தவாறே உள்ளது. ஒரு கணமும் நான் ஆனந்தத்தில் திளைத்ததில்லை. நீங்கள்தான், அந்த ஆனந்தமான மன நிலையை எனக்கு அருள வேண்டும்.' என்றார். சற்று நேரம் கண்களை மூடித் திறந்த ஞானி, 'உனது அசையும் சொத்துக்களையும், அசையா சொத்துக்களின் பத்திரங்கள் அனைத்தையும், ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டு வந்து எனக்கு முன்னால் வை... நான் உனக்கு ஆனந்தத்தைக் காட்டுகிறேன்' என்றார்,
ஆஹா... இந்த ஞானி, எனது சொத்துக்களை இரட்டிப்பாக்கி எனக்கு ஆனந்தத்தைக் கொடுக்கப் போகிறர்... என்ற எதிர்பார்ப்பில், ஞானி சொன்ன படி... அனைத்தையும் ஒரு பெரிய மூட்டையாகக் கட்டிக் கொண்டு வந்து ஞானியின் முன்னால் வைத்தார். ஞானி கண்களை மூடி அமர்ந்திருந்தார். செல்வந்தரும் சற்று கண்களை மூடியபடி அமர்ந்தார்.
அவர் கண் விழித்துப் பார்த்த போது, எதிரில் ஞானியைக் காணவில்லை. ஞானியுடன், செல்வந்தர் கொண்டு வந்த மூட்டையயையும் காணவில்லை. பதறிப் போன செல்வந்தர், தான் ஏமந்து போனதை நினைத்து... கவலையால் பித்துப் பிடித்தது போலானார். மரத்தைச் சுற்றிலும் தேடியழைந்து, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல்... மீண்டும் மரத்தடிக்கே வந்து பார்த்த போது... மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார்.
காரணம், ஞானி எப்போதும் போல அந்த மரத்தடியின் கீழ் அமர்ந்திருந்ததும்... அவருக்கு முன்னால் இவர் கொண்டுவந்து வைத்த மூட்டையும் அப்படியே இருந்ததும்தான். செல்வந்தர் ஓடிபோய்... தனது மூட்டையைத் தூக்கி மடியில் வைத்தபடி... ஞானியைப் பார்த்தவாறே ஆனந்தத்துடன் அமர்ந்திருந்தார்.
கண்ணை விழித்த ஞானி, 'பார்த்தாயா அப்பா... ! நீ தேடிக் கொண்டிருந்த ஆனந்தம் எப்போதும் உன்னிடம்தான் இருந்திருக்கிறது. என்ன, அது உனது மடியில் இருக்கும் மூட்டையில்தான் இருந்திருக்கிறது. அது எப்போது, உனது மனதிற்கு மாறுகிறதோ... அப்போதுதான்... அது நிரந்தரமான ஆனந்தமாக மலரப் போகிறது... !' என்றார்.
புரிந்தும்... புரியாமலும்... செல்வந்தர் தனது மூட்டையைக் கட்டிப் பிடித்தபடியே... மகிழ்ச்ச்சியில் திளைத்தபடியே தனது இருப்பிடத்தை நோக்கிச் சென்றார்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment