Friday, May 15, 2020

தவறுகளும்... தண்டனைகளும்...



'ஒரு நாட்டின்... ராஜா, குற்றம் சாட்டப்பட்டு... தன் முன் கொண்டு வந்து நிறுத்தப்படும் ஒவ்வொருவரையும்... எந்தக் கேள்விகளும் கேட்காமல்... தனது சிம்மாசனத்தில் இருந்து எழுந்து... ஒரு பிரம்பைக் கொண்டு... சரமாரியாக அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

அந்த ராஜாவுக்கான தீர்ப்பு நாளும் வந்தது. ராஜா இந்த மண்ணை விட்டு நீங்கிவிட்டான். அவனை அடக்கம் செய்வதற்காக இடுகாட்டுக்கு சென்றனர். ராஜாவின் உடலைத் தகனம் செய்வதற்கான மேடையில் வைத்து... தகனமும் செய்யப்பட்டது. இடுகாட்டுக் காவல்காரனைத் தவிர அனைவரும் தத்தமது இருப்பிடத்திற்குத் திரும்பி விட... காவல்காரன் மட்டும் எரிந்து கொண்டிருக்கும் உடலுக்குக் காவலாக இருந்தான்.

எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் உடல்... எழும்புகளின் இறுக்கத் தளர்வுகளின் போது... சற்று எழுந்த நிலைக்குச் செல்வது வழக்கம். ஆனால், வழக்கத்திற்கு மாறாக... இந்த உடல் மட்டும், மீண்டும்... மீண்டும்... எழுந்து கொள்வதைக் கண்டு, காவல்காரனுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

ராஜாவிற்கான இயல்பான குணம்தான் அது என்பதை அறியாதலால்... தனது கையில் இருக்கும் தடியைக் கொண்டு, மீண்டும்... மீண்டும்... அந்த உடலை அடித்து படுக்கும் நிலைக்குக் கொண்டுவந்தான்... காவல்காரன்.'

இந்தக் கதையை அடியேனுக்குக் கூறிய எனது குருநாதர்... 'பார்த்தாயா அப்பா... ! தன்னைத் தேடி நியாயம் கேட்க வந்தவர்களிடம் தவறாக நடந்து கொண்ட ராஜாவுக்கான தண்டனையை...? அவன் தண்டணை கொடுக்கும் போது, அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். இன்று அவன் தண்டணையைப் பெறும் போது, யாருமே பார்க்காமல், தனியே அதை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இதுதான் தவறுகளும்... அதற்கான தண்டனைகளும்...' என்று விளக்கினார்.

குருநாதரின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...