Thursday, May 14, 2020

பாபா வழங்கிய ஒன்பது நாணயங்கள்.




'லக்ஷ்மீ பாய் சாவித்ரி'... பாபாவின் பக்தர்களால், லக்ஷ்மீ பாய் என்று அன்புடன் அழைக்கப்படும் பாபாவின் அத்யந்த பக்தர்களில் ஒருவர். அவருக்குத்தான், பாபா தான் தனது மகா சமாதி நாளன்று... தனது அன்புக் கரங்களால்... ஒன்பது வெள்ளி நாணயங்களை வெகுமதியாக அளித்தார்.

பதினாறு வயது பாலகனாக பாபா, சிரீடிக்கு விஜயம் செய்த போது, ஊருக்கு வெளியில் அமைந்திருந்த ஒரு வேப்பமரத்தின் கீழே எப்போதும் மோன தவத்தில் வீற்றிருந்தார். அவரின் தெய்வீக எழிலையும்... அந்த சிறு வயதிலேயே அந்த இளைஞன் பெற்றிருந்த வைராக்கிய தவத்தையும்... கண்டு, அவரின் மீது பக்தி வைத்தவர்தான்... லக்ஷ்மீ பாய்.

அந்த இளைஞனைத் தேடி காடுகளுக்குள் பயணம் செய்து... அந்த இளைஞன் கண்மூடி ஆழ்ந்த தவத்தில் இருந்தாலும்... சோள ரொட்டியைப் பாலில் நனைத்து... அந்த இளைஞனின் வாயைத் திறந்து வலிந்து ஊட்டிவிட்ட தாயார்தான் இந்த லக்ஷ்மீ பாய். அவரின் சேவை, பாபாவின் இறுதி நாள் வரைத் தொடர்ந்தது என்றால்... இது, தாய்க்கும் மகனுக்கும் இடையேயான பந்தத்தைத் தவிர வேறெதுவாக இருக்க முடியும்... !

எப்போதும் மதிய உணவு வேளையில்... துவாரகமாயியில்... மத்திய ஆராதனை நேரத்திற்குப் பின், பாபாவுக்கு நிவேதனம் செய்யப்பட்ட வித விதமான உணவு வகைகள் தட்டுகளில் நிறைந்து இருக்கும். எல்லோரும், பாபாவுக்கு இருமருங்கிலும் அமர்ந்து உணவு உட்கொள்ளத் தயாராக இருப்பார்கள். ஆனால் பாபாவோ... லக்ஷ்மீ பாயின் சோள ரொட்டிக்காகக் காத்திருப்பார். அவரது சோள ரொட்டி வெஞ்சனத்துடன் வந்து சேர்ந்த உடன்... பாபா உண்ணும் முதல் கவளம் லக்ஷ்மீ பாயீயின் சோள ரொட்டியாகத்தான் இருக்கும்.

பாபாவுக்கும், லக்ஷ்மீ பாயீக்கும் இடையே நடந்த எண்ணற்ற நிகழ்வுகள் பக்தர்கள் அனைவருக்கும் பெரும் பாடங்களாக அமைந்தன. ஒரு நாள் மதிய வேளையில், தமக்கு அருகிலிருந்த லக்ஷ்மீ பாயிடம், 'தாயே... ! எனக்குப் பசிக்கிறது... கொஞ்சம் சோள ரொட்டி கிடைக்குமா... ? என்று பாபா கேட்டார். 'பாபா...! சில நொடிகள் பொறுத்திருங்கள்... உடனே வந்து விடுகிறேன்' என்று சென்ற லக்ஷ்மீ பாயீ, சுடச் சுட சோள ரொட்டியையும்... சர்க்கரை கலந்த பால் மற்றும் வெஞ்சனத்தை பாபாவின் முன் வைத்தார்.

தனக்கு முன் வைத்த சோள ரொட்டியை தட்டுடன் நகர்த்தி எதிரில் வைத்தார்... பாபா. அதுவரை வாலை ஆட்டிக் கொண்டு சுவரோரமாக நின்ற நாயொன்று ஆவலுடன் ஓடி வந்து அந்த தட்டிலிருந்த சோள ரொட்டியை வேக வேகமாக விழுங்கியது. நாய் பசியாறியதும்... தனது வயிற்றைத் தடவிக் கொண்ட பாபா... பசியாறியதற்கு ஏதுவாக ஏப்பம் விட்டு முறுவலித்தார்.

'இந்த நாய்க்கு உணவிடுவதற்காகத்தான்... என்னை இத்தனை வேகமாக சமைக்கச் சொல்லி... கொண்டுவரச் சொன்னீர்களா...?' என்று அவர் பொய்க் கோபம் கொண்டு கடிந்து கொள்கையில்... பாபா, 'எனக்கு உணவு அளிப்பதும்... பசியில் வாடி நிற்கு அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பதும் ஒன்றுதான்... லக்ஷ்மீ...!' என்று பகர்ந்தார்.

இந்த பந்தத்திற்கு பாபா செய்த நன்றிதான்... தனது இறுதி நேரத்தில் அந்தத் தாயாரின் கைகளில் கொடுத்த ஒன்பது... ஒரு ருபாய் வெள்ளி நாணயங்கள். அந்த நாணயங்களை கொடுக்கும் போது... அவர் அப்போதுதான் கடும் காய்ச்சலிலிருந்து எழுந்திருந்தார். தானே எழுந்து... கைக் கிராதியின் மேல் சாய்ந்து கொண்டு... தனது கஃப்னியின் பாக்கெட்டில் கைவிட்டு... முதலில் ஐந்து நாணயங்களையும்... பிறகு நான்கு நாணயங்களையும்... லக்ஷ்மீ பாயீயின் கைகளில் வைத்தார்.

ஏன் இந்த நடைமுறை...? பாகவதத்தில், பகவான் கிருஷ்ணர் உத்தவருக்கு அளித்த உபதேசத்தில்... பக்தர்களின் பாங்கு... ஒரு குருவிடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை 'ஒன்பது குணங்களாக' வரிசைப் படுத்துகிறார். இது 'ஸ்ரீமத் பாகவதத்தின்'... 11 ஆவது காண்டத்தில்... 10 ஆவது அத்தியாயத்தில்... 6 ஆவது சுலோகத்தில்... முதல் வரியில் 'ஐந்தாகவும்'.... இரண்டாவது வரியில் 'நான்காகவும்' வர்சைப்படுத்தப் படுகிறது. அதே கிரமத்தில்தான்... பாபாவும் இந்த நாணயங்களை... பக்தியில் சிறந்த லக்ச்மீ பாயீ சாவித்திரிக்கு அளித்திருக்கிறார். அதை இன்றும் சீரடி செல்லும் பக்தர்கள்... லக்ஷ்மி பாயீயின் வீட்டில் பார்க்கலாம்.

அந்த 'ஒன்பது நாணயங்கள்' மூலம்... 'பகவான் கிருஷ்ணர்' உபதேசித்த... சிஷ்யர்களுக்கான... ஒன்பது உத்தம குணங்களைப் பார்ப்போம்...

1. கர்வமில்லாமல் இருப்பது.
2. பொறாமை இல்லாமல் இருப்பது.
3. சாமர்த்தியம் உள்ளவராக இருப்பது.
4. மமதை இல்லாதவராக இருப்பது.
5. திடமான அன்புள்ளவராக இருப்பது.
6. அவசரப்படாதவராக இருப்பது.
7. அர்த்தத்தை அறிய ஆவலுல்ளவராக இருப்பது.
8. அசூசை இல்லாதவராக இருப்பது.
9. வீண் பேச்சு பேசதவராக இருப்பது.

ஸாய்ராம்.




No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...