Tuesday, May 19, 2020

வாசி யோகம்... ஒரு அறிமுகம்.பகுதி - 1





வாசி யோகம்... என்பது மூச்சுக் காற்றுடன் சம்பந்தப்பட்ட ஒரு கலை.

முதலில் மூச்சுக் காற்று எவ்வாறு செயல்படுகிறது... ? என்பதை சற்று ஆராயலாம்.

உலகில் வசிக்கும்... சுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்து உயிரினங்களுக்குள்ளும் மனிதனுக்கு மட்டுமே, சுவாசம் 'இடகலை... பிங்கலை... ' என்ற இரண்டு நிலைகளில் சுவாசம் செயல் படுகிறது.

ஏனைய அனைத்து உயிரினங்களுக்கும்... சுவாசம் அதன் இயல்பாக இருக்கிறது. அதாவது 'சுழுமுனையாக' இருக்கிறது.

இடகலை என்பது... நமது சுவாசம், நமது நாசியின் இடது துவாரத்தின் வழியே சீராக வெளிப்படுதலாகும்.

பிங்கலை என்பது... நமது சுவாசம், நமது நாசியின் வலது துவாரத்தின் வழியே சீராக வெளிப்படுதலாகும்.

இந்த இரு நிலை சுவாசத்தைத்தான்... மனித குலம் அனுபவித்து வருகிறது.

சுழுமுனை என்பது... சுவாசம் அதன் மூலத்திலே அடங்கி... அதன் வெளிப்பாடு... மிக மெல்லியதாக... இரண்டு நாசித் துவாரங்களின் வழியாக... வெளிப்படுதலாகும். இது மனிதனைத் தவிர்த்து ஏனைய அனைத்து உயிரினங்களுக்கும் இயல்பாகிறது.

இதற்கான காரணத்தை ஆராய்ந்தால்...

ஏனைய உயிரினங்கள் அனைத்தும்... இறைவனின் திட்டப்படியே தமது 'கர்ம வினைகளை' அனுபவிக்கின்றன. அவற்றிற்கு, தாம் செய்யும் அல்லது எதிர் கொள்ளும் செயல்களுக்கான 'முடிவு  எடுக்கும் உரிமை' வழங்கப்படவில்லை. அவைகள் தாம் எதிர்கொள்வதையும்... செய்வதையும் தமது 'கர்ம வினைகளுக்கு உட்பட்டு' எதிர்கொள்கிறது. ஆதலால், அவற்றிற்கு சுவாசம் எப்போது 'சுவாதீனமாகிறது.

அதனால்தான், அவற்றிற்கு மோப்ப சக்தி மிகுந்து இருக்கிறது. அவற்றால், தாம் எவ்வாளவு தூரம் பயணித்தாலும்... தான் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும்... தாமாக வந்து சேரும் ஆற்றல் இருக்கிறது.

ஆனால், மனித குலத்திற்கு அந்த சுவாசம் 'சுவாதீனமாக இருப்பதில்லை'. அது பின்னமாகிறது. ஆதலால்தான் இடகலை... பிங்கலை என பின்னப்பட்டுப் போகிறது. இதற்குக் காரணம், மனிதனுக்கு இறைவன் வழங்கியிருக்கும் 'முடிவு எடுக்கும் உரிமைதான்'.

மனிதன் தன் 'கர்ம வினைகளை' அனுபவிக்கும் போது... அதை தான் செய்யும் செயல்களாகவும், தான் எதிர் கொள்ளும் செயல்களாகவும் அனுபவிக்கிறான். அவன் எதிர்கொள்ளும் அல்லது மேற்கொள்ளும் செயல்களுக்கான முடிவைத் 'தீர்மானிக்கும் உரிமையைத்தான்'... இறைவன் மனிதனுக்கும் மட்டும் வழங்கியிருக்கிறான்.

அந்தக் 'கர்ம வினைகள்தான்' எண்ணங்களாக ஒவ்வொரு மனிதனின் மனத்திலிருந்தும் இடையறாது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த ஒவ்வொரு எண்ணத்திற்கும்... மனிதன் எவ்வாறு தனது வெளிப்பாட்டை வெளிப்படுத்தப் போகிறான்... ? என்பதற்கான முலமாகத்தான்... அவனது 'சுவாசம்' வெளிப்படுகிறது. அது இடகலையாகவும்... பிங்கலையாகவும்... மாறி, மாறி வெளிப்படுவதிலிருந்து... அவனது மாறி, மாறி வரும் எண்ண அலைகளைப் புரிந்து கொள்ளலாம்.

இதைத்தான், வாசி யோகம் அறிந்தவர்கள், தமக்கு முன்னால் வந்து அமர்ந்திருப்பவர்களின் எண்ண ஓட்டத்தை... தமது உள்ளார்ந்த சுழுமுனை என்ற உள்ளார்ந்த சுவாசத்தின் மூலம் அறிந்து... அதற்கான வழியைக் காட்டுகிறார்கள்.

இந்த வாசி யொகத்தைப் பற்றி... தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.


2 comments:

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...