'குரு தேடல்'... இந்தத் தேடலை மேற்கொள்ளாமல், ஒரு 'ஆன்மீக சாதகனின்' வாழ்வு பூரணமாகாது.
'இறைவனின்' திருவடியில் சரணடையும் ஒரு பக்தனை, அந்த இறைவன் தனது இன்னருளினால், அவனது மனதைத் தூய்மையாக்கி, அந்த மனதினில், ஒரு 'குருவுருவாகி'... பக்தனை, ஒரு சாதகனாக மாற்றுகிறான். இறைவனின் கருணைதான்... குருவின் திருவருளாகிறது.
அதுவரை, 'பக்தனாக' இருந்தவன் 'சாதகனாக' மாறும் போது... அவனுக்கு 'கேட்ட, அறிந்த, பார்த்த...' விஷயங்கள் யாவும் அனுபவங்களுக்கு உள்ளாகிறது. இந்த அனுபவத்தை அருள்பவரே 'குரு'. அந்த குரு, ஒரு 'சத்குருவாக' அந்த சாதகனை வழிநடத்தி... இறைவனின் சாந்நியத்திற்குள் கொண்டு சேர்க்கிறார்.
பக்தனாக ஆரம்பித்த ஒருவரது வாழ்வு... ஒரு 'சத்குருவின்' தொடர்பை அனுபவிக்கும் போதுதான்... பூரணத்துவத்தை அடைகிறது.
இந்த மாற்றத்தை உருவாக்குபவராக... ஜோதிடத்தில்... 'குரு பகவான்' அமைகிறார். இவரது அமைவு எந்த நிலையிலிருந்தாலும்... அது வலுத்திருந்தாலும்... வலுகுறைந்திருந்தாலும்... ஜாதகரை, அவரது 'மூலத்திற்கு' இட்டுச் செல்லும் பணியை பூரணமாக்குவார். அதனால்தான், ஜோதிட வழக்கில்...'குரு பார்க்க ... கோடி நன்மை...'என்ற சத்திய வாக்கு என்றும் ஒலிக்கத் தவறுவதில்லை.
உதாரணமாக...
'கும்ப லக்னத்தில்' பிறந்த ஜாதகருக்கு, 'குரு பகவான்', 'தனம்-வாக்கு-குடும்பம்' என்ற '2 ஆம் பாவத்திற்கும்'... 'லாபம்' என்ற '11 ஆம் பாவத்திற்கும்' அதிபதியாகி... 'தர்மம்-பாக்கியம்' என்ற '9 ஆம் பாவத்தில்' அமர்வதாகக் கொள்வோம்.
இந்த அமைவினால்...தர்மத்தில் ஓங்கியவராகவும்... தந்தையின் புகழை மேம்படுத்துபவராகவும்... அனைத்து பாக்கியங்களையும் அனுபவிப்பவராகவும்... பூர்வத்திற்கு பெருமை சேர்ப்பவராக மட்டுமல்ல... அந்த பூர்வத்தினை பெருக்குபவராகவும்... இவரது வாழ்வு அமைந்து விடும்.
இந்தச் செல்வத்தில் உழல்வதிலேயே இவரது வாழ்வு கடந்து விடும். ஆனால், இவரது வாழ்வைத் தக்க தருணத்தில், இறைவன் ஆட்கொண்டு, அந்தப் பாதையிலிருந்து விடுவித்து... 'நிலையற்ற' செல்வ வாழ்விலிருந்து மீட்டு... 'நிலையான' பிறப்பற்ற ஆனந்தத்தை அருளும் வாழ்வில் பயணிக்க வைப்பார்.
அந்த பாக்கியத்தை அருளும் ஸ்தலமாக இருப்பதுதான்... தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் அமைந்துள்ள 'சுவாமிமலை' ஆலயம்'.
முருக பகவானின், 'அறுபடை வீடுகளில்' ஒன்றான இந்த 'சுவாமி மலையில்' ஒரு 'சிறிய குன்றின்' மீது எழுந்தருள் செய்கிறான்... குமரக் கடவுள்.
இந்த ஆலயத்தின் பிரதான முர்த்தியாக...'சுந்தரேஸ்வரரான ஈஸ்வரனும்' தாயாராக... 'மினாட்சியான உமாமகேஸ்வரியும்' எழுந்தருளியிருக்கிறார்கள்.
இந்த ஆலயத்தின் பிரதான முர்த்தியாக... முருகன் எழுந்தருளியிருப்பது... ஒரு புராண வரலாறாக மலர்கிறது.
தன்னை மதிக்காது சென்ற 'பிரம்மனை' அழைத்து, 'படைப்புக்கு மூலம் எது...? என்ற கேள்வியை எழுப்ப... அவரும், 'அது பிரம்மத்திலிருந்து வெளிப்படும் பிரணவம்தான்' என்று பதிலளிக்கிறார். உடனே, முருகன், 'அந்த பிரணவத்தின் பொருள் என்ன...?' என்று கேட்க, அதற்கான பொருளை விளக்க முடியாது, அவர் நிற்க... 'பிரணவத்தின் பொருள் தெரியாது எவ்வாறு படைப்புத் தொழிலை மேற்கொள்ளலாம்...?' என்று 'பிரம்மனைச்' சிறையிலடைக்கிறான் 'முருகன்'.
'பிரம்ம பகவானின்', படைப்புத் தொழிலையும் தானே மேற்கொள்கிறான். சிறையிலிருந்த 'பிரம்ம பகவானின்' பிரார்த்தனைக்கு இணங்கி, முருகனை அழைத்த சிவபெருமான், 'முருகா, உனக்கு அந்த பிரணவத்தின் பொருள் தெரியுமா..?' என்று கேட்க... உலகத்திற்கே தந்தையான சிவபெருமானை சிஷ்யனாக்கி... தான் ஒரு சத்குருவாக நின்று... அவரின் காதுகளில், பிரணவத்திற்கான பொருளை உரைத்தார்.
தந்தைக்கு பொருளுணர்த்தியதால்... 'தகப்பன் சுவாமி' என்று அழைக்கப்பட்டு... சுவாமிமலையில்... 'சுவாமிநாதனாக'... 'சத்குருவாக' எழுந்தருளியிருக்கிறார்.
பொருளுலக வாழ்வில் சிக்க்த் தவிக்கும் ஜீவர்கள்... அருளுலகத்திற்குச் செல்லும் மார்க்கத்தின்... பொருளுரைப்பவராக இந்த 'தகப்பன் சுவாமி' திகழ்கிறார்.
தொடர்ந்து பயணிப்போம்... இறவனின் அருளோடு...
ஸாய்ராம்.




No comments:
Post a Comment