ஆசை இருக்கும் வரை தேடல்கள் ஓய்வதில்லை.
ஒரு மனிதனுக்கு, இந்த உலக சுகங்களில் ஆசை இருக்கும் வரை, அவனால், அவனது தேடுதல்களைத் துறந்துவிட முடிவதில்ல. ஆசையினால் விளையும் இன்பத்தை நுகர்ந்து கொண்டிருக்கும் வரை, தேடுதல்களிலிருந்து விடுபட முடிவதில்லை.
கங்கை நதியின் கரையில் நங்கூரமிட்டிருந்த ஒரு கப்பலின் பாய் மரத்தில். ஒரு பறவை தன்னை மறந்து அமர்ந்திருந்தது. கப்பலும் மெதுவாக கரையிலிருந்து புறப்பட்டு கடலை நோக்கிப் பயணித்து, நடுக் கடலை அடைந்தது.
தனது சுய நிலைக்குத் திரும்பிய பறவை, நான்கு புறமும் திரும்பிப் பார்த்தது. தன்னைச் சுற்றி எங்குமே கரை தென்படாதைக் கண்டது. அது வடக்கு திசையை நோக்கிப் பறந்தது. கரையை அடைந்து விடலாம் என்ற எதிர்பார்ப்பில், வெகு தூரம் பரந்த பறவை, கரையைக் காணாமல், களைத்துப் போய், என்ன செய்வது என்று தெரியாமல், மீண்டும் கப்பலுக்கே வந்து, பாய் மரத்தில் அமர்ந்து கொண்டது.
இம்முறை, மீண்டும் தன் முயற்சியைத் தொடங்கிய பறவை, கிழக்கு திசையை நோக்கிப் பறந்தது. இந்தத் திசையிலும் கரையைக் காணமுடியவில்லை. எத்திசையில் பார்த்தாலும், எல்லையில்லாத கடலைத்தான், பறவையால் பார்க்க முடிந்தது. மிகவும் களைத்துப் போய், மீண்டும் பறந்து வந்து கப்பலின் பாய் மரத்திலேயே அமர்ந்தது.
நீண்ட நேர ஓய்விற்குப் பின், மீண்டும் தனது முயற்சியைத் தொடங்கிய பறவை, இம்முறை தெற்குக்கும், மேற்குக்குமாக தனது பயணத்தைத் தொடர்ந்தது. இம்முறையும்,எந்தத் திக்கிலும் கரையைக் காணமுடியாததால், திரும்பி வந்து கப்பலிலேயே அமர்ந்துவிட்டது.
இப்போதுதான், அதற்குப் புரிந்தது, 'பொறுமையுடன் இருந்தால், கப்பல் கரை சேரும் போது, நாமும் கரை சேர்ந்துவிடலாம்...' என்ற யதார்த்தமான உண்மை.
இப்போது, எந்த முயற்சியும் எடுக்காமலும், கவலைப் படாமலும், அமைதியுடன் அமர்ந்து விட்டது. அது கவலைகளில் இருந்தும் விடுபட்டுவிட்டது. மீண்டும் அது, கப்பலை விட்டு நீங்கவே இல்லை.
ஆசையற்றுவிட்டால்...தேடல்கள் தேவையில்லை.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment