இந்தப் பிறவிக் கடலைக் கடக்கும் உபாயத்தை, 'ஒரு சத்குருவின்' துணையுடன் அறிந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம். எண்ணற்ற புத்தகங்களைப் படித்து பெறும் அறிவு, இதற்குத் துணை வராது.
ஒரு முறை, வெள்ளெமென திரண்டு ஓடும் கங்கை நதியை சிலர் படகில் கடந்து கொண்டிருந்தனர். அதில் ஒரு பண்டிதரும் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அந்தப் பயணத்தின் நடுவிலே அவர், தனது புலமையை, விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தார். தான், வேதங்களையும், வேதங்களின் சிகரமான வேதாந்தங்களையும், ஆறு சாஸ்த்திரங்களையும், எண்ணற்ற தத்துவ நூல்களையும் கற்றிருப்பதாகப் பிரதாபித்துக் கொண்டிருந்தார்.
அதனோடு, கூட பயணித்த ஒருவரிடம், 'வேதத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா...?' என்று கேட்டார். அதற்கு அந்த பயணி, 'இல்லை, ஐயா..' என்றார். 'வேதாந்தத்தைப் பற்றி தெரியுமா...?' என்பதற்கு 'இல்லை, ஐயா...' என்றார். 'ஆறு சாஸ்த்திரங்களில் ஏதாவது ஒன்று அல்லது தத்துவ நூல்களாவது படித்திருக்கிறிர்களா...?' என்பதற்கும், 'இல்லை, ஐயா...' என்றே பதிலளித்து விட்டு, பண்டிதரின் வீணான பிரதாபங்களைக் கேட்டும், மௌனமாக அமர்ந்திருந்தார்.
அப்போது, கங்கையாற்றின் மீது பெரும் காற்று வீசத் தொடங்கியது. அலைகள் பெருக்கெடுத்து, படகு தத்தளித்து, மூழ்கும் நிலைக்கு வந்துவிட்டது. படகில் திகிலுடன் அமர்ந்திருந்த, பண்டிதரைப் பார்த்து, சக பயணி, 'ஐயா, உங்களுக்கு நீந்தத் தெரியுமா...?' என்று கேட்டார். பயத்தில் தத்தளித்த பண்டிதர், 'தெரியாது...' என்ற ஒற்றை வார்த்தையை பதிலாக்கினார். அதற்கு அந்த பயணி, 'எனக்கு வேதமோ, வேதாந்தமோ, சாஸ்த்திரமோ, தத்துவமோ தெரியாது. ஆனால், எனக்கு நீந்தத் தெரியும்...' என்று பதிலளித்தார்.
கற்றுக் கொள்வதால் பெருகும் 'அகங்காரத்தை' விட, கடைபிடிப்பதால் வரும் 'அனுபவமே' பயனளிக்கக் கூடியது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment