ஜோதிடக் கலையில், மிகவும் பிரசித்தமான கிரகமாக கொண்டாடப்படுபவர்தான், 'குரு பகவான்'. சுப கிரகங்களின் வரிசையில், தலைமைப் பதவியை வகிப்பவராக இருப்பவர்.
ஒரு ஜீவனின், உலக வாழ்வையும்... அந்த ஜீவனின் உள் வாழ்வையும்... ஒன்றாக இணைப்பவர். அந்த இணைப்புதான், ஜீவனை உலக வாழ்விலிருந்து மீட்டு, உள் வாழ்வில் பயணிக்க வைத்து... மீண்டும் பிறவாமை என்ற முக்திக்கு வழி வகுக்கிறது.
ஜாதக சித்திரத்தில்... இவரது அமைவும், பார்வையும் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த பார்வை பலத்தைத்தான்... 'குரு பார்த்தால் கோடி நன்மை...' என்ற வாசகம் வெளிப்படுத்துகிறது.
மேலும், இந்த 'குரு பகவானின்' அதிதேவதையாக, 'ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி' விளங்குகிறார். இந்த'தக்ஷ்ணாமுர்த்தி', 'சிவபெருமானாரின்' 64 மூர்த்தங்களில் ஒன்றாகத் திகழ்பவர்.
இந்த ரூபத்தில்தான், பெருமானார், 'சனகாதி முனிவர்களுக்கு', ஞானத்தை அருளினார். அந்த அருள் 'ஞானப் பெருக்கின், 'ஆனந்தத்தில் திளைத்து' அந்த நால்வரும், தம்மை மறந்து, குரு பகவானின் திருவடியில் அமர்ந்திருக்கும் நிலையைத்தான்... சிவபெருமானாரின் திரு ஆலயங்களின் பிரகாரங்களில், நாம் கண்டு வணங்குகிறோம்.
ஜோதிடத்தைப் பொருத்தவரையில், இரண்டு விதமான 'இறை பரிகாரங்கள்' இந்த 'குரு பகவானுக்காகத்' தேவைப்படுகிறது.
1) ஜோதிடச் சித்திரத்தில் 'குரு பகவான்' அமைந்திருக்கும் நிலையைப் பொருத்து, அவர் வெளிப்படுத்தும் 'கர்ம வினைகளுக்கு ஏற்ப', அவரமைந்திருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, அவரிடம் சரணடைவது.
2) உலக வாழ்விலிருந்து... இந்தத் 'தொடர் பிறவிகள்' என்ற 'பிறவிப் பிணியிலிருந்து'... ஜீவர்கள் மீள வேண்டுமெனில், அந்தப் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரையேறிய... 'சகஜ சமாதி நிலையிலிருக்கும்' 'சத்குருக்களின்' தொடர்பு தேவைப்படுகிறது. அந்தக் 'குரு தேடலுக்காக' ஆலயங்களில் சென்று, அந்தத் 'திருமுர்த்திகளை' வணங்கிச் சரணடைவது.
இந்த இரண்டுக்குமான... தேடல்களை... இறைவனின் அருளால் தொடர்வோம்...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment