'புத பகவான்' ஜோதிடத்தில்... கல்விக்கும், அறிவுக்கும், புத்திக்கும், வித்தைக்கும், காரகத்துவராக இருக்கிறார். 'ஆய கலைகள் அறுபத்து நான்கினுக்கும்' மூலமாகத் திகழ்கிறார்.
உறவுகளில், 'மாமன்களுக்கும்'... வியாபாரத்தில், 'தொடர்புகளுக்கும்'... நிர்வாகத்தில், 'இடைத் தரகுகளுக்கும்'... உடலில், 'நரம்புகளுக்கும்'... பொறுப்புகளைச் சுமக்கிறார்.
ஜோதிடத்தில் இவர் அமையும் அமைவின் மூலமாகவே... அந்த ஜீவன் அனுபவிக்கப் போகும் 'கர்ம வினைகளின் விளைவுகளை' நாம் அறிந்து கொள்ளலாம்.
ஒருவருக்கு அவர் விரும்பும் துறையிலேயே 'ஜீவனமும்' வாழ்வும் அமையும் என்றால், அதை விட மகிழ்ச்சி வேறொன்றும் இல்லை. அதுவே, அவருக்குச் சற்றும் பிடிக்காத துறையில் 'பணியும், வாழ்வும்' அமையும் போது, அதை விட வேறு துயரமும் இல்லை.
தனக்கு அமையும் ஜீவனம், வெறும் வாழ்விற்கான வழி மட்டும்தான்... என்று அமைவதையும், அந்த ஜீவனமே, தனது வாழ்வாக அமைந்து, அதில் ஒன்றிப் போவதையும்... 'புத பகவானின்' அமைவே வெளிப்படுத்திவிடும்.
'புத பகவான்' ஜாதகத்தில் வலிமையாக அமையும் போது, 'அறிவுடன்' கூடிய கல்வியும், அதுவே அவர் மறைந்து அமையும் போது, 'ஞானத்துடன்' கூடிய கல்வியும் அமைந்து விடுவதைக் காணலாம். அதனால்தான், 'மறைந்த புதன் நிறைந்த கல்வி' என்று வழங்கப்படுகிறது.
ஒருவரது ஜாதகத்தில், 'புத பகவானின்' அமைவு, பலமிழந்து காணப்பட்டால், 'அவர் வெளிப்படுத்தும் விளைவுகளிலிருந்து மீண்டு', அந்தக் குறையை, நிறைவாக்க... அந்தக் குறைகளை நிவர்த்தி செய்யக் கூடிய ஆலயங்களுக்குச் சென்று, அந்த ஆலயத்தின் 'இறைவனிடம்' சரணடைய, அந்தக் குறைகளிருந்து விடுபட்டு, நிறைவான வாழ்வினை அடையலாம் என்பது திண்ணம்.
உதாரணமாக,
மேற்கண்ட ஜாதகத்தில், 'மீன லகனத்தில்' பிறந்திருக்கும் ஜாதகருக்கு, 'புத பகவான்', 'உயர் கல்வி - தாய் - சுகம் - விடு - வாகனம்' (4 ஆம் பாவம்) என்றும், 'தொடர்பு - நட்பு - களத்திரம் என்ற துணை' (7 ஆம் பாவம்) என்றும், பொறுப்புகளைச் சுமக்கிறார். அவர், தனது பலத்தை இழந்து, நீச நிலையில், லக்னத்திலேயே (1 ஆம் பாவம்) அமர்ந்திருக்கிறார்.
இந்த அமைவினால், தான் சுகம் அடைய வேண்டிய நிலை மாறி, தன்னால், தனக்குறியவர்கள் சுகம் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார். அந்த பொறுப்பைச் சுமக்க முடியாத நிலையில், வாழ்வில் தத்தளிக்கும் சுழலுக்குத் தள்ளப்படுவார். இந்த நிலையில் வாடித் தவிக்கும் இவர்,
நாகப்பட்டிணம், சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ள, திருவெண்காடுக்குச் சென்று, அங்கு எழுந்தருளும், 'சுவாமி சுவேதாரன்யேஸ்வரர், தாயார் பிரம்ம வித்யா நாயகியைத்' தரிசனம் செய்து,
தாயாருக்கு அருகில், சந்திர புஷ்கரணியின் கரையில், தனிச் சன்னிதானத்தில் எழுந்தருளியுள்ள, 'புத பகவானை' தரிசனம் செய்து வர...
இவர், தனக்கு ஏற்படும் தடங்கல்களிலிருந்து விடுபட்டு, தனது கடமைகளை பூரணமாக பூர்த்தி செய்வதற்கான சூழல்கள் உருவாகும் என்பது திண்ணம்.
தொடர்ந்து பயணிப்போம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.




No comments:
Post a Comment