'சூரிய பகவான்' சுட்டிக் காட்டும் 'கர்மவினைகளைக்' களைந்தோடச் செய்யும், ஆலயங்களில், மிகவும் பிரதானமானது, 'ஆடுதுறையில்' அமைந்திருக்கும் , 'சூரியனார் கோவில்' என்றால் மிகையில்லை.
இந்தப் பிரபஞ்சத்தின் நாயகனாக, ஒளி கொடுக்கும் வள்ளலாக, பிரபஞ்சத்தின் மூலமாக, இருக்கும் 'சூரிய பகவானை' இந்த உலகிலுள்ள ஜீவர்கள் அனைவரும், அன்றாடம் கண்டு, மகிழ்ந்து, வணங்கி மகிழ்கிறோம்.
அதனால்தான் என்னவோ, அவருக்கான 'தனி ஆலயங்களின்' எண்ணிக்கை, மிகவும் சொற்பமாக அமைந்திருக்கிறது. வடக்கில் அமைந்திருக்கிற 'கோனார்க்' சூரிய பகவானின் ஆலயமும், தெற்கில், தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கருகில், ஆடுதுறையில் அமைந்திருக்கும், 'சூரிய பகவானின்' ஆலயமும்... இதில் மிகக் குறிப்பிடத்தக்கன.
இதில், கோனார்க்கில் அமைந்துள்ள ஆலயத்தில், 'சூரிய பகவான்' தனது தரிசனத்தை, கிரணக்கதிர்கள் மூலம்தான் அருள்கிறார். அங்கு அவருக்கு வழிபாடுகள் இல்லாத நிலை இருக்கிறது.
ஆனால், ஆடுதுறையில், அமைந்துள்ள 'சூரிய பகவானின்' ஆலயத்தில் அன்றாட வழிபாடுகளும், நித்திய பூஜைகளும், ஆராதனைகளும் இடைவிடாது நடந்து கொண்டிருக்கின்றன. எனவே, இந்த உலகத்திலெயே, 'சூரிய பகவானுக்கென' அமைந்துள்ள ஒரே ஆலயம்... இதுதான் என்றால், அது மிகையில்லை.
இந்த ஆலயத்தில், 'சூரிய பகவான்', 'உஷாதேவி - சாயாதேவி' சமேதராக எழுந்தருளியிருக்கிறார். அவருக்கு எதிரில் 'குரு பகவானும்' ஏனைய கிரகங்கள் அனைத்தும், பிரகாரங்களில் எழுந்தருளியிருக்கின்றன.
ஜோதிடத்தில், 'சூரிய பகவானை'... 'ஆத்மகாரகர்' என்று அழைக்கிறோம். அதற்குக் காரணம், இந்த ஜீவனுக்கு, உயிராக, மூலமாக இருக்கும், 'ஆத்மாவைப் பிரதிபலிப்பவராக'... இவர் இருப்பதால்தான்.
இதை உணர்ந்து கொண்டு, ஒரு ஜீவன் தனது மூலமான, ஆத்மாவில் சங்கமிப்பதற்கே, இந்தப் பிறவியை எடுக்கிறது. இந்த, சூட்சுமத்தை உணர்ந்து கொள்ள, ஜீவன், அதற்கே இயல்பாகிய, உணர்வாகிய, ஞானத்தில் திளைக்க வேண்டும்.
அதற்கு, அந்த 'ஞானத்திற்குக் காரகரான'... 'குரு பகவானின்' அருள் கடாக்ஷத்தை, ஜீவன் பெருவது மட்டும் முக்கியமல்ல... ஜாதகத்தில், இந்த 'சூரிய பகவானுக்கும்'... அவரின் அருள் கடாக்ஷம் கிடைத்திட வேண்டும்.
ஜோதிடத்தில்... 'சூரிய பகவானுக்கு' நேரெதிரில், 7 ஆம் பாவத்தில், 'குரு பகவான்' அமைவதோ, அல்லது, இருவரும் ஒரே பாவத்தில் இணைவதோ, இந்த 'ஞான ஊற்றை' ஜீவனுக்கு அளிக்கும் அமைவாக அமையும்.
இந்த அமைவைப் பெற்ற ஜாதகர், தனது 'உலக வாழ்விலும்'... நேர்மையை கடைபிடிப்பவராக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் தனக்கு உள்ளும் - புறமும் ஒரே மனநிலையில் இருப்பவராகவும் இருப்பார். இவருக்கெதிராக எந்தத் துன்பமும் எதிர்த்து நிற்காது... என்பதை, இவரின் வாழ்வின் பாதையே காட்டும்.
ஏனைய கிரகங்களின் அமைவினால், இந்த உலக வாழ்வில், தர்ம வாழ்வின் வழியே செல்பவர்கள் கூட, தனது 'ஆத்ம சுகத்திற்காக' இந்த ஆலயம் சென்று, அங்கு எழுந்தருளியிருக்கும், 'சாயாதேவி - உஷாதேவி சமேத சூரியப் பிரபுவையும்'... அவருக்கு நேரெதிரில் நின்று அருளும், 'குரு பகவானையும்' ஒரு சேர தரிசனம் செய்து வர, இவர்களிருவரது அருள் கடாக்ஷத்திற்கு ஆளாகி, தனது 'உள் வாழ்வுத்' தெளிதலுக்கான... ஞானத்தை அடைவார்கள் என்பது திண்ணம்.
இறைவனது அருளுடன்... தொடர்ந்து பயணிப்போம்...
ஸாய்ராம்.


No comments:
Post a Comment