நாம், வாழ்வில் 'மேற்கொள்ளும்' அல்லது 'எதிர்கொள்ளும்' சூழல்களுக்கு, நமது வெளிப்பாடுகள் 'செயல்களாக' இருக்கும். அந்த 'செயல்களின் விளைவு', துன்பங்களை அளிப்பதாக இருக்கும் போது,
நமது மனதில்...
~ நாம் நியாயமான முறையில்தானே நடந்து கொண்டோம், பின் ஏன் இவ்வாறு ஏற்படுகிறது...?
~ நாம் மனதறிந்து எவருக்கும், எப்போதும், மனதளவில் கூட ஒரு துன்பத்தை அளித்ததில்லையே, பின் ஏன்... இவ்வளவு பெரிய துன்பத்திற்கு ஆளாக வேண்டியிருக்கிறது...?
... போன்ற கேள்விகள் எழுவது நியாயமே...!
ஆனால், நம்மால், நமக்கு முன் நடக்கும் 'காரியங்களை' மட்டும்தான் பார்க்க முடிகிறது. அதற்குப் பின்னால் இருக்கும் 'காரணங்களை' அறிந்து கொள்ள முடியாமல் போகிறது.
அந்தக் காரணங்களை நமது மனம் தேடி அலைகிறது. அதற்கான பதிலை இந்த 'ஜோதிடக் கலையால்' மட்டுமே சுட்டிக் காட்ட முடிகிறது.
இந்த ஜீவன், தனது 'கர்ம வினைகளை' சுமந்து கொண்டு பிறவிகளை அடைகிறது. அதன் ஒவ்வொரு செயலையும், அதன் விளைவையும், அந்த 'கர்ம வினைகளே'' தீர்மானிக்கின்றன... என்ற உண்மையை இந்தக் கலை ஒன்றே, அருதியிட்டுச் சொல்கிறது. இந்த 'கர்ம வினை சுழலை' நிர்வகித்து, பிறவிகள் தோறும் பகிர்ந்து அளித்து, அதைக் கண்காணிக்கும் வல்லமை 'இறை சக்தியடமே' இருக்கிறது.
மனித வாழ்வின் இக்கட்டுகளையும், அவர்களது துன்பத்தின் தொடர்களையும் நீக்கி, 'கர்ம வினைகளிலிருந்தே' விடுவித்து, அவர்களை மீண்டும் 'பிறவாமைக்கு' அழைத்துச் சென்று, 'இறைவனின் திருவடிகளில் கலக்க வைப்பதொன்றே' ஜோதிடக் கலையின் நோக்கமாக இருந்தது.
இதை முலமாக வைத்துதான், இந்த ஜோதிடக் கலையை வடிவமைத்து, அதை ஒரு கருவியாக்கி, அதன் மூலம் ஜீவர்களை கடைதேற்றம் செய்தார்கள் ரிஷிகள்.
ஜீவர்களது, வாழ்வில் நடக்கும் துன்பத்திற்கு, 'இதுதான் காரணம்' என்று, ரிஷிகளால் துல்லியமாகச் சுட்டிக் காட்ட முடிந்தது. அந்த ஞானத்தை பெற்றிருந்த ரிஷிகளுக்கு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்ததால், ஜீவனின் 'வாழ்வு ரகசியத்தை' ரிஷிகளுக்கு வெளிப்படுத்தியது இறைசக்தி.
இன்று அந்த ஞானம், அரிதாகிப் போனதாலும், வெளிப்படுத்துபவர்க்ளுக்கு எதிர்பார்ப்புகள் உண்டாதனாலும், 'காரணங்களை' துல்லியமாக அரிய முடியாமல் போகிறது.
ஆனாலும், 'இந்தத் துன்பத்திற்கான காரணம்... இதுதான்... 'என்பதை 'கிரகங்களின் அமைவு', ஜோதிடத்தின் மூலமான 'இராசிச் சக்கரத்தில்' சூட்சுமமான அமைவுகளால் சுட்டிக் காட்டுக்காட்டப்படுகின்றன.
அதை அறிந்து கொண்டு, அந்தக் கிரகங்களின், 'அதிதேவதைகளான' இறைசக்திகளை, அவை 'அர்ச்சாவதாரங்களாக' எழுந்தருளியுள்ள, ஆலயங்களுக்கு சென்று, வழிபடுவதால், அந்தக் 'காரணங்கள்' என்ற 'கர்ம வினைக் கட்டிலிருந்து' விடுபட முடியும் என்பது கண்கூடு.
அதால்தான், இந்தக் காரணங்களுக்காக... இந்த ஆலயத்திற்கு... சென்று வருவது, துன்பத்தைக் குறைத்து, இன்னல்களிலிருந்து வெளிபடுவதறகான வாய்ப்பாக அமையும் என்பதை... ரிஷிகள், ஞானிகளுக்குப் பின் வந்த ஜோதிட மேதைகள் கடைப் பிடித்து வந்தார்கள்.
நமது 'கர்ம வினைகள்', நமது உலக வாழ்வின் தொடர் சுகத்திற்கு தடையாக இருக்கலாம். ஆனால், உள் வாழ்வின் இடையறா சுகத்திற்கு. எவ்வித தடையையும் ஏற்படுத்த முடியாது.
இந்த சூட்சுமத்தைக் கண்டறிந்த ஆன்றோர்கள், இறைவனிடம் 'சரணாகதி' அடையும் வழியைத்தான் காட்டினார்கள். இறைவனிடம் 'ஒரு உறவை 'ஏற்படுத்திக் கொள்ளத் தூண்டினார்கள்.
அந்த 'உறவுதான்'... பரிகாரம். அதுதான் 'இறை பரிகாரம்'.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment