Sunday, December 22, 2019

ஆலய தரிசனம்தான்... ஆன்மீகத்தின் ஆரம்பம்.





நமக்குள் இருக்கும் 'இறைவனின் பேரருள் கருணையை' நாம் உணர்ந்து கொள்வதுதான்... பக்தியை மூலமாகக் கொண்ட ஆன்மீகத்தின் நோக்கம். அதற்கான முதல்படிதான் ஆலய தரிசனம்.

'ஆகம விதிகளின்படி' உருவாக்கப்பட்டுள்ள ஆலயங்களின் அமைவே இதனை உறுதிப்படுத்துகிறது. ஆலயங்களின் அமைவுக்கும்... மனித உடலமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மனித உடல் எவ்வாறு... படைப்பவனின் சூட்சுமங்களைக் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கிறாதோ... அதுபோலவே. ஆலயங்களும்... அதே சூட்சும அமைவுகளைக் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

கண்ணுக்குப் புலனாகும் உருவ அமைவுகளுடனும்... கண்ணுக்குப் புலனாகாத உருவ அமைவுகளுடனும் மனித உடல் படைக்கப்பட்டிருக்கிறது.

கண்ணுக்குப் புலனாகும் மனித உடல்... 'மூளையை' மையமாகக் கொள்கிறது. கண்ணுக்குப் புலனாகாத மனித உடல்... 'மனதை' மூலமாகக் கொண்டது.

கண்ணுக்குப் புலனாகும் மனித உடலின் மூலமான... 'மூளையை' , கண்ணுக்குப் புலனாகாத மனித உடலின் மூலமான... 'மனம்தான்' இயக்குகிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்வதுதான் ஆன்மீகத்தின்  முதல் படி. இதற்கான விதையை விதைக்கும் இடம்தான் ஆலயம்.

மனதை மூலமாகக் கொண்டு இயங்கும் மனித உடல்... அதன் மூலமான உயிரின் மையத்தில் இருந்து உற்பத்தியாகிறது. அந்த உற்பத்தி ஸ்தான மூலத்திற்குத்தான்... 'ஆன்மா' என்று பெயர். அதுதான்... இந்த உடலின் புலனாகாத அமைப்பின் 'மூலம்' அல்லது 'கருவறை'.

இதே அமைவைத்தான்... 'ஆகம விதிகளாக' உருவாக்கி 'ஆலயங்களை' அமைத்திருக்கிறார்கள் நமது முன்னோர்களான ரிஷி புங்கவர்கள். 'இறைவனின் ரூபத்தை' மூலமாகக் கொண்டு... கண்ணுக்குத் தெரியும் இறைவன் உருக்கொண்டிருக்கும் இடமாக அமைத்திருக்கிறார்கள். அதனால், இந்த ஆலயங்களுக்குள் நாம் பிரவேசிக்கும் போது... நமது உடலின் கண்ணுக்குத் தெரியும் உடலமைவு... இந்த ஆலய அமைவுடன் ஒத்துப் போகும்படியாக அமைகிறது.

நமது உடலை 'எண் சாண்' உடல் என்று அழைக்கிறோம். அவரவர்களது 'கை சாண்' அளவின் எட்டு மடங்கு போல இந்த உடலளவு அமைகிறது. அதுபோலவே, ஆலய அமைவுகளும்... மனித உடலைப் பிரதிபலிப்பது போல... இராஜ கோபுரத்திலிருந்து, கருவறை வறையில்... 'எண்சாண்' அளவுகளில் அமைக்கப்பட்டிருக்கிறது.

அதனுள் பிரவேசிக்கும்... மனிதனுக்கு, எவ்வாறு... அவனது கண்களுக்குப் புலனாக 'மனதின் இயக்கம்' அவனை வழி நடத்துகிறதோ... அதுபோலவே, ஆலயத்தில்... கண்ணுக்குப் புலனாக 'இறைவனின் சூட்சும இயக்கம்' மனிதனின், மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இந்த மாற்றம்தான்... இறுதியில், 'உள்ளிருந்து நம்மை இயக்கும் அந்த பேராற்றலின் உணர்வுதான்... இறைவனின் பேரருள் கருணை...' என்ற உண்மையை உணரவைக்கிறது.

'ஆலய தரிசனம்தான்... ஆன்மீகத்தின் ஆரம்பம்...!'

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...