Friday, December 20, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 63. "மறைவு ஸ்தானங்கள்- '12 ஆம் பாவம்' - வழியேயான ஜீவனின் வாழ்வு"... பகுதி-19.





'மறைவு ஸ்தானங்கள்' என்றழைக்கப்படும் 3, 6, 8 மற்றும் 12 ஆம் பாவங்கள் வெளிப்படுத்தும்... 'கர்ம வினைகளின் விளைவுகளின்' ஆய்வுகளில், இதுவரை 3, 6 மற்றும் 8 அம் பாவங்களை ஆய்ந்தோம்.

தொடர்ந்து... 12 ஆம் பாவம் வெளிப்படுத்தும்... கர்ம வினைகளின் விளைவுகளை ஆய்வோம்...

12 ஆம் பாவம் ( சுக-சயன-விரய ஸ்தானம் )

பொதுவாகவே இந்த ஸ்தானத்தை 'விரய ஸ்தானம்' என்று அழைக்கிறோம். அது இருக்கும் அல்லது சேர்க்கும் பொருள்கள் மற்றும் சொத்துக்களை இழக்கும் இடம் மட்டுமல்ல... இந்த ஜீவன் கொண்டுவந்திருக்கும் 'கர்ம வினைகளின் விளைவுகளையும்' இழக்கும் ஸ்தானம். மேலும் இந்த ஸ்தானம் 'நிம்மதியான' வாழ்வையும், நிறைவான தூக்கத்தையும் கொடுக்கக் கூடிய 'சுக-சயன் ஸ்தானம்' என்ற பணிக்கும் காரணமாகிறது.

உதாரணம் 1

'விருச்சிக லக்னத்தில்' பிறந்த ஒரு ஜாதகருக்கு... 12 ஆம் பாவத்தில்... அந்த ஸ்தானாதிபதியாகிய 'சுக்கிர பகவான்'... துலா இராசியில், சித்திரை நட்சத்திரத்தின் 3 ஆம் பாதத்தில் அமைவதாகக் கொள்வோம்.

# 12 ஆம் பாவத்தில் அமரும் 'சுக்கிர பகவான்' அந்த ஸ்தானத்திற்கு அதிபதியாகி... ஆட்சி பலம் பெறுகிறார். மேலும்... லக்னாதிபதியாகிய 'செவ்வாய் பகவானின்' நட்சத்திரமான... சித்திரை நட்சத்திரத்தின் 3 ஆம் பாதத்தில் அமர்ந்து லக்னாதிபதிக்கு துணையாக, பலமாக அமைகிறார். அவரின் 7 ஆம் பார்வை 6 அம் பாவத்திற்கு அமைகிறது.

இந்த அமைவைப் பெற்ற ஜாதகர்...

* இந்த ஜாதகரின் வாழ்வின் அடிப்படை தேவைகள் எப்போதும்... அவரின் வாழ் நாள் முழுவதும் நிறைவாக பூர்த்தி செய்யப்படுவதாக... இவரின் வாழ்வு அமையும். (சுக்கிர பகவானின் ஆட்சி பலமும்... செவ்வாய் பகவானின் நட்சத்திர இயக்கமும்...)

* நேர்த்தியான உடைகளை அணிபவராகவும்... இவரின் சூழல்கள் அனைத்தும் அது வீடாக இருந்தாலும்... பணி புரியும் அலுவலகமாக இருந்தாலும்... தொழில் புரியும் இடமாக இருந்தாலும்... சுத்தமாகவும், நேர்த்தியாகவும், அழகாகவும், ஒழுங்குடனும் இருக்கும். ( சுக்கிர பகவானுக்கும்... செவ்வாய் பகவானுக்குமான சூட்சுமத் தொடர்பு...)

* இவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் சூழல்களையும்... இவரின் செயல்கள் முழுமையடைய இவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் சூழல்களையும்... மிக நேர்த்தியாக எதிர் கொண்டு வெற்றி பெறுவார். ( சுக்கிர பகவானின் பார்வையை 6 ஆம் பாவம் பெறுவதால்...)

* குறைவான உணவை உட்கொண்டாலும்... அது சுவையாகவும், சூடாகவும், சத்தனதாகவும் உட்கொள்வார்.

* இவரின் தூக்கமும்... நிம்மதியும் எப்போதும் நிறைவானதாக இருக்கும்.

உதாரணம் 2

'விருச்சிக லக்னத்தில்' பிறந்த ஒரு ஜாதகருக்கு... 12 ஆம் பாவத்தின் ஸ்தானாதிபதியாகிய  'சுக்கிர பகவான்'...  கன்னி இராசியில்... துலா இராசியில், சித்திரை நட்சத்திரத்தின் 1 ஆம் பாதத்தில் அமைவதாகக் கொள்வோம்.

# 11 ஆம் ஸ்தானமான லாப ஸ்தானத்தில் 12 ஆம் பாவாதிபதியும், ஸ்தானாதிபதியுமாகிய 'சுக்கிர பகவான்' அமர்ந்தாலும்... நீச நிலையில் பலமற்று அமைகிறார். அவரின் 7 அம் பார்வை... பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆம் பாவத்தின் மீது படிகிறது.

இந்த அமைவைக் கொண்ட ஜாதகர்...

* சுக வாழ்வுக்காக ஏங்குபவராக இருப்பார். ( சுக்கிர பகவானின் நீசத்துவம்...)

* தனது சுக வாழ்வுக்காக தனது பூர்வத்தையே இழப்பவராக இருப்பார். ( சுக்கிர பகவானின் பார்வையை 5 ஆம் பாவமான பூர்வ புண்ணிய ஸ்தானம் பெறுவதால்...)

* தனது தூக்கத்திற்காக ஏதாவது ஒரு புற வழியை தேர்ந்தெடுப்பார். (மாத்திரைகள்... வஸ்துக்கள்... போன்றவற்றை...)

* எவ்வளவு முயற்சி செய்யினும்... அதன் விளைவான லாபத்தை மிகவும் சிரமப்பட்டு அடைவது மட்டுமல்ல... அதுவும் முழுமையாக அனுபவிக்க முடியாத சூழலும் ஏற்படும்.

* இவரின் தூக்கம்... கனவுகளால் களைக்கப்படுவதாகவும், நிம்மதியற்ற நிலையிலும் அமையும்.

இது வரையிலும்... திரிகோணம்; கேந்திரம்; பணபர ஸ்தானங்கள்; மறைவு ஸ்தானங்கள்... பூர்வ புண்ணிய கர்ம-வினைகளை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பதை... உதாரணங்களுடன் ஒரு சிறு ஆய்வாக கடந்து வந்தோம்.

இறைவனின் அருளோடு... மேலும் பல ஜோதிட சூட்சுமங்களை தொடர்ந்து ஆய்வோம்...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...