Saturday, December 28, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 64. 'கடக-சிம்ம லக்னங்களும் சனி பகவானும்'





பொதுவாக 'சனி பகவானை' பற்றிய பயம் ஜோதிடத்தை அணுகுபவர்களுக்கு நிறைந்திருந்தாலும்... அது அவ்வாறானதல்ல...

'ஆயுள் காரகராக' இருந்தாலும்... அவர் 'தர்மத்தை' நிலை நாட்டுபவராக செயல் படுவதால்... தர்மத்தின் வழியே நடக்கும் போது... 'சனி பகவானைப்' பற்றிய கவலையை தள்ளி வைப்பதுதான் நியாயம்.

அனைத்து லக்னதாரர்களும் 'சனி பகவானைப்' பற்றிய ஆய்வுகளில் ஆர்வம் காட்டினாலும்... 'கடக - சிம்ம லக்னதாரர்கள்'... 'சனி பகவானையும்', அவரது அமைவையும்... அவரது தசாக் காலத்தையும்... மிகவும் ஆபத்தானதாகவே பார்க்கிறார்கள்.

அது அவ்வாறானதல்ல... ஏனெனில்... கடக லக்னாதிபதியான 'சந்திர பகவானுக்கும்'... சிம்ம லக்னாதிபதியான 'சூரிய பகவானுக்கும்'... சனி பகவானே, 'களத்திர ஸ்தானாதிபதியாகிறார்'. இதிலிருந்தே அவரின் முக்கியத்துவம் எவ்வாறானது என்பது தெரிகிறது. அதனால்தான், இந்த 'சனி பகவானின்' அமைவை நன்றாக ஊன்றி கவனிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

கடக லக்னத்திற்கும்... சிம்ம லக்னத்திற்கும்... சனி பகவான், 'மகர இராசியையும்', 'கும்ப இராசியையும்' தனது ஆதிபத்தியத்தால் ஆள்கிறார்.

மகர இராசியிலும், கும்ப இராசியிலும்... சனி பகவான்...

# 'சூரிய பகவானின்' சாரமான... உத்திராட நட்சத்திரத்தின் 2,3 மற்றும் 4 ஆவது பாதங்களையும்...

# 'சந்திர பகவானின்' சாரமான... திருவோண நட்சத்திரத்தின் 1,2,3 மற்றும் 4 ஆவது பாதங்களையும்...

# 'செவ்வாய் பகவானின்' சாரமான... அவிட்ட நட்சத்திரத்தின் 1,2,3 மற்றும் 4 ஆவது பாதங்களையும்...

# 'ராகு பகவானின்' சாரமான... சதய நட்சத்திரத்தின் 1,2,3 மற்றும் 4 ஆவது பாதங்களையும்...

# 'குரு பகவானின்' சாரமான... பூரட்டாதி நட்சத்திரத்தின் 1,2 மற்றும் 3 ஆவது பாதங்களையும்...

... கடந்து போகிறார்.

இதில், 'சனி பகவான்' கடந்து போகும் நட்சத்திர சாராதிபதிகளாகிய... 'சூரிய - சந்திர - செவ்வாய் - குரு பகவான்கள்'... கடக இராசிக்கும், சிம்ம இராசிக்கும்... 'யோகாதிபதிகளாக' அமைகிறார்கள். 'ராகு பகவான்'... 'நிழல் கிரகமாகி', அவரின் நிலையை ஒட்டிய பலன்களை அளிக்க வல்லவராகிறார்.

ஆதலால், 'சனி பகவான்' அவரமரும் சாரங்களின் வழியேயான 'கர்ம வினைகளின் விளைவுகளைத்தான்' வெளிப்படுத்துவார். இதை 'இராசியில்' அவர் அமரும் நிலைகளைப் பொருத்தும், இந்த நட்சத்திர சாரத்தைக் கொண்டு... இவர் 'அம்ஸத்தில்' அமையும் பலத்தையும் பொருத்துத்தான், நிர்ணயம் செய்தல் வேண்டும்.

தர்மத்தின் நாயகனை... பூரணமாக அறிந்து கொள்வதே, அவரின் மீது கொள்ளும் அனாவசியமான பயத்தை நீக்கும் வழியாகும்.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...