"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"... ( அதிகாரம் : கடவுள் வாழ்த்து, குறள்-5 )
'உலகப் பொது மறை' என்று போற்றப்படும் திருக்குறள்... 'அறம்... பொருள்...இன்பம்... வீடு...' என்ற வாழ்வின், நால்வகை வழி முறைகளை அளித்திருந்தாலும்... காலப்போக்கில், நம்மிடம் எஞ்சி இருப்பது... 'அறம்-பொருள்-இன்பம்' என்ற மூன்று வழிகாட்டுதல்கள்தான்.
ஆனால்... 'வீடு' என்ற அரும்பொக்கிஷம் அளித்திருக்கக் கூடிய அனுபவத்தை... 'கடவுள் வாழ்த்து' என்ற அதிகாரத்தில்... முதல் 'பத்து குறள்களிலேயே' அளித்து விடுகிறார் இந்த 'சித்த மகா புருஷர்'.
இந்த 5 ஆம் குறள் அளிக்கும் பொது விளக்கம்...
'கடவுளின் உண்மைப் புகழை விரும்பி... பக்தி செலுத்துகிறவர்களிடம், இருள் வாழ்வை ஒப்பும்... இரண்டு வினைகளும் சேர்வதில்லை...' என்பதாக அமைகிறது.
'உலகவாழ்வு, உள்வாழ்வு'... என்ற இரு நிலைகளிலும் நம்மை வழி நடத்தும்... 'பொதுமறையான'... திருக்குறள், 'இரு நிலை வாழ்வுக்கும்' மிகத் தெளிவான... அனுபவத்துடன் கூடிய... வழிகாட்டுதல்களை அளிக்கிறது.
உலக வாழ்வில்... 'பிறவிப் பிணி' என்ற 'தொடர் பிறவிகள்தான்'... நீக்க முடியாத துன்பமாகக் கருதப்படுகிறது. இந்தத் துன்பத்திலிருந்து நீங்குவதற்கான, ஒரே வழி... மீண்டும் பிறவியை அடையாத நிலைதான். அந்த நிலைக்கான வழிமுறையைத்தான்... இந்த முனிபுங்கவர் அளிக்கிறார்.
பிறவிக்குக் காரணமான 'கர்ம வினைகளுக்கு'... மூலமாக இருப்பது... ஜீவன், தனது 'கர்ம வினைகளின்' மூலம் வெளிப்படுத்தும்... செயல்பாடுகளின் விளைவுகளினால்... சேரும், 'நல்வினைகள் மற்றும் தீவினைகள்'... என்ற 'இரு வினைகளின் 'தொகுப்புகள்தான்.
இந்த இருவினைகளின் சேர்க்கை, மீண்டும், மீண்டும் ,,, ஜீவர்களை பிறப்புகளுக்குள் ஆழ்த்துகிறது. இந்த 'இருள் வாழ்விலிருந்து' மீள்வதற்கான உபாயம் எது...? என்ற கேள்விக்கான பதிலை இந்தக் குறளின் மூலம் அளிக்கிறார்.
எவரொருவர்... தனது வாழ்நாளிலேயே... இந்த இரு-வினைகளிலிருந்தும் விடுபட்டு... இந்த 'இருள் வாழ்வின் சுழலை வென்று'... 'என்றும் ஒளிரும்... ஒளி வாழ்வில் ஒன்று கலந்திருக்கிறாரோ... அவரால்தான், இதற்கு வழிகாட்ட முடியும். அவர்தான்...'சத்குரு' என்று அழைக்கப்படுகிறார்.
அந்த 'சத்குருவைத்தான்'... இறைவன் பொருள் சேர்ந்தார் புகழ்புரிந்தார் மாட்டு' என்ற அடியில் வலியுருத்துகிறார்.
உலகச் சுகங்களுக்காக தேடும் 'பொருள்களாக'... பிறவிகளுக்குள் ஆழ்த்தும், 'நிலையற்ற செல்வங்களைக்' குறிப்பிடுகிறார்.
உள்வாழ்வின் நிரந்தர சுகங்களுக்காக... இறைவனிடம் சென்றடையும்... 'பக்தி - ஞானம் - கர்மம்...' என்ற நிலையான வழிமுறைகள... 'பொருள்கள்' என்று குறிப்பிடுகிறார்.
அந்த ... இறைவனை அடையும் வழிமுறைகளான... பக்தி... ஞானம்... கர்மம்... வழியே... ஒரு ஜீவனை, வழிநடத்தும் 'சத்குரு'... அந்த ஜீவனை, மீண்டும் இருள் நிலைக்குத் தள்ளும்... பிறவிகளிலிருந்து மீட்டு... ஒளியுள்ள... இரண்டு வினைகளும் சேராத... பிறவிகளற்ற வாழ்வில் கொண்டு சேர்த்துவிடுவார்... என்பதைத்தான் இந்தக் குறள்... சூட்சுமமாக வெளிப்படுத்துகிறது.
இதைத்தான்...
'குரு பிரம்மா... குரு விஷ்ணு... குருத் தேவோ மகேஸ்வரஹ... குரு சாக்ஷாத் பரப்பிரம்மா... தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ...'
என்ற சுலோகம் வெளிப்படுத்துகிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment