Wednesday, December 4, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 52. 'திரிகோணமும் -_உலக வாழ்வும்'. ஸ்தானங்கள் வழியேயான ஜீவனின் வாழ்வு. பகுதி-8.





'உலக வாழ்வுக்கு' இட்டுச் செல்லும் 'திரிகோண அமைவையும்'... அதற்கேற்ப ஜாதகத்தில் அமையும் கிரக அமைவுகள் மற்றும் பாவ அமைவுகளையும் ஆய்வோம்...

# 'உலக வாழ்வு' என்ற புற வாழ்வை நோக்கி பயணம் செய்யும் ஜீவனுக்கு... இந்த 'திரிகோணம்' என்ற 'முக்கூட்டுக் கிரகங்கள்' வலுக்கும் போது... பரந்து... விரிந்து இருக்கும் உலக வாழ்வில்... அனைத்து சுகங்களையும் அனுபவிக்கும் பாக்கியங்களும்... பெயரும்... புகழும் வந்து சேரும் வகையில் ஜீவனின் பிறப்பு அமையும்.

பிறவியின் போதே... உலக வாழ்வு உச்சத்திற்கு செல்லும் வாய்ப்புடைய குடும்பத்தில் பிறவி அமையும். செல்வச் செழிப்பில் பிறக்கும் வாய்ப்பு ஏற்படும். தேடுதல் என்ற குறிக்கோளுடன்... தனது இலக்கை நோக்கி பயணம் செய்வதற்கான புண்ணியங்களைப் பெற்றுக் கொண்டு பிறவி அமையும். 'The baby born with silver spoon...' என்ற வாக்குக்கு ஏற்றபடியான... பூர்வம் என்ற 5 ஆம் கோணம் அமையும்.

பிறந்ததிலிருந்தே ஒரு தேடுதல் இந்த ஜீவனுக்கு இருக்கும். குடும்பத்திலும்... உறவிலும்... சுற்றத்திலும்... அனைவரும் ஈர்க்கும் வண்ணம் பிள்ளைப் பருவம் இருக்கும். எதிர்கால சுக வாழ்வுக்கான போராட்டத்திற்கு ஏற்றவாறு கல்விப் பாதை அமையும். புரிந்து கொண்டு படிக்கும் தன்மையும்... அதை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது எப்படி...? என்ற தேடுதல் எப்போதும் இருக்கும். எந்த விஷயத்தை அணுகினாலும்... அதனால் தனக்கு என்ன லாபம் கிடைக்கும்...? என்ற தேடுதல் இருக்கும். எந்தப் போராட்டத்தையும்... தைர்யத்துடன் எதிர்கொள்ளும் தன்மை இயல்பாகவே இருக்கும். சுறுசுறுப்பான உள்ளத்தையும் ... தெகத்தையும் கொண்டவராக ஜாதகர் இருப்பார். இதை லக்னம் என்ற 1 ஆம் கோணம் உணர்த்தும்.


'தொட்டது எல்லாம் துலங்கும்...' என்பது இவருக்குப் பொருந்தும். இயற்கையாகவே ஈர்ப்புத் தன்மை கொண்டவராதலால்... எந்தத் துறையில் இவர் ஈடுபட்டாலும்... அந்தத் துறையில் உள்ளவர்களால்... அரவணைக்கப்படுவார். அந்தத் துறையில் இருக்கும் அனைத்து படிநிலைகளையும் கற்றுத் தேர்ந்து... அதில் முன்னிலை வகிப்பார். தந்தை, தாய், சகோதரம்... உறவுகள்... நட்பு... சுற்றம்... என அனைவருடனும் அரவணைப்புடன் நடந்து கொள்வார். அனைவரது அன்பையும்... அரவணைப்பையும்... எப்போதும் அனுபவிப்பாராக வாழ்வு அமையும்.

பூர்வத்திலும்... தனது உழைப்பாலும் சேர்த்த சொத்துக்களை பன்மடங்காகப் பெருக்கும் வண்ணம்... இவரது வாழ்வு அமையும். தன-தான்யங்கள்... வீடு-வாகனங்கள்... பொன்-பொருள்கள்... என செல்வச் செழிப்புடனான வாழ்வை வாழ்வார். பெயரும்... புகழும் கிடைக்கும் வகையிலான தான-தர்மங்களில் மட்டும் ஈடுபடுவார். உலக வாழ்க்கை சுகம் மட்டுமே உண்மை... என்ற அசையா நம்பிக்கையைப் பெற்றிருப்பார். இதை பாக்கியம் என்ற 9 ஆம் கோணம் வெளிப்படுத்தும்.

இந்த 'உலக வாழ்வை' வெளிப்படுத்தும் ஜாதகத்தில்... அமைந்திருக்கும் சிறப்பான கிரக அமைவுகளைப் பற்றியும்... லக்ன பாவங்களையும்... தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்...

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...