கடந்த தொடர்களில்... 'திரிகோண அமைவுகளின்' பலம் மற்றும் பலவீனங்களைப் பொருந்து... ஜீவர்கள் அனுபவிக்கும் 'கர்ம வினைகளின் விளைவுகள்' பற்றிய நிலைகளை ஆய்ந்தோம்.
இந்தத் 'திரிகோண அமைவு' உணர்த்தும் 'சில சூட்சுமங்களை' வரிசைப்படுத்துவோம்...
'லக்னம்-பூர்வம்-பாக்கியம்' என்ற இந்த 'முக்கூட்டு' அமைப்பு... உள் வாழ்வுக்கும்... உலக வாழ்வுக்கும்... உணர்த்தும் சூட்சுமத்தை உதாரணங்கள் மூலமாக பார்ப்போம்...
# 'உள் வாழ்வு' என்ற... மூலத்தை நோக்கித் திரும்பும் ஜீவனுக்கு... இந்த திரிகோணம் என்ற ஸ்தானங்கள் வலுக்கும் போது, 'ஆத்மாவுக்குறிய' குணங்களான 'சத்து - சித்து - பரமானந்தம்' என்ற குணங்களுடன் அந்த ஜீவனின் பிறப்பு அமையும்.
பிறவியின் போதே... அந்த 'உள் வாழ்வுக்கான' குடும்ப சூழலில் பிறப்பு ஏற்படும். அந்தப் பெற்றோர், இது போன்ற ஒரு குழந்தைப் பேறுக்காக இறை வழிபாடும்... பிரார்த்தனைகளும் செய்தவர்களாக இருப்பர். அருள் வழியிலான வாழ்வும்... அதற்கேற்ப சூழல்களும்... இந்தக் குழந்தையின் பிறப்பின் போது இயல்பாகவே அமைந்து விடும். பிறந்ததற்குப் பின் எதிர் கொள்ளப் போகும் வாழ்வின் சூழல்களால்... தடம் மாறி விடாது... தனது இலக்கை நோக்கிப் பயணம் செய்வதற்கான புண்ணியங்களைப் பெற்றுக் கொண்டு பிறக்கும். இதைப் 'பூர்வம் என்ற 5 ஆம் கோண அமைவு' உணர்த்தும்.
இந்த சூழலில்... அதற்கேற்ப ஒரு தகுதியான ஜீவனாக இந்த ஜீவனின் பிறப்பு அமையும். பிறந்ததிலிருந்து 'உள் நோக்கித் திரும்பும் பாதையில்' அடியெடுத்து வைக்கும் குழந்தையாக இருக்கும். தெய்வீக நாட்டமும்... பக்தியும்... சிரத்தையும்... இயல்பாகவே அமையும். எதையும் ஆழ்ந்து உள்வாங்கும் தன்மையும்... அதைத் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையும்... தக்க நேரத்தில் அதை வெளிப்படுத்தும் தன்மையும் இயல்பாகவே கூடி வரும். எந்த சூழலிலும் அதன் பாதையை மாற்றிக் கொள்ளாத... சலனமற்ற மனோ நிலையைப் பெற்றிருக்கும். உடலும்... உள்ளமும் வலிமையானதாக பிறப்பு அமையும். இதை 'லக்னம் என்ற 1 ஆம் கோணம்' உணர்த்தும்.
இலக்கை நோக்கிய பயணத்திற்கும்... அதற்கேற்ற தகுதியும் பெற்றிருக்கும் ஜீவனுக்கு... தனது வாழ்வின் கடமைகளை 'தர்மத்துடனும்... கர்மத்துடனும்' அணுகும் தன்மை இயல்பாகவே அமையும். உள் வாழ்வு பயணத்திற்கு எந்த வித தடையும் வாராத நிலைகள் அமையும். அதன் பயணம் பக்குவம் கூடியதாக ஜீவனை படிப்படியான நிலைகளில்... ஒவ்வொன்றையும் அனுபவித்து கடந்து போக வைக்கும்.
வெளி வாழ்வைப் போன்றல்லாமல்... உள் வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்றமும் களைந்து போகும் தன்மையுடன் இருக்காது. அது அடுத்தடுத்த நிலைகளுக்கு ஜீவனை இட்டுச் செல்லும் தன்மையுடன் அமையும். தனது வாழ்வின் நிலை எங்குள்ளதோ... அந்த நிலையின் கடமைகள் அனைத்தையும் 'பற்றற்று' முடித்து... தனது 'கர்ம வினைகளின் கட்டுகளை' அவிழ்த்து... உள் வாழ்வில் கலந்து போகும் பாக்கியம் தானாக அமையும். இதை 'பாக்கியம் என்ற 9 ஆம் கோணம் உணர்த்தும்.
இந்த 'உள் வாழ்வை' நோக்கித் திரும்பும் ஜாதகங்களில் 'சிறப்பு அமைவுகள்' அமைந்திருக்கும்... அதைத் தொடர்ந்து ஆய்வோம்... இறை அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment