Sunday, November 3, 2019

ஸாயீ மஹான், ' ஸ்ரீ முருக பகவானின் திருக்கல்யாணத்தன்று' அளித்த அற்புத அனுபவம்

ஸாயீ மஹான், 'ஸ்ரீ முருக பகவானின் திருக்கல்யாணத்தன்று' அளித்த அற்புத அனுபவம் :





23.10.2006, கார்த்திகை மாதத்து இறுதி ஞாயிற்றுக் கிழமை, திருவரங்கம், 'ஸ்ரீ செல்லாயி அம்மனின்' தரிசனத்திற்கு வழக்கம் போல சென்றிருந்தேன். கோவிலின் பூஜாரி 'திரு. சரவணன்' அவர்கள், கோவிலின் பிரகாரத்திற்கு அழைத்துச் அழைத்துச் சென்று... முந்தைய 'வியாழக் கிழமையன்று' 'செல்லாயி அம்மனின்'திருவுருவப் படத்திற்கருகே பிரதிஷ்டை செய்யப்பட்ட... 'ஸாயீ மஹானை' தரிசனம் செய்து வைத்தார்.

கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் 'பாபாவை' தரிசனம் செய்தேன். 2004 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆலயத்திற்கு செல்லும் அடியவனுக்காக... அந்த ஆலயத்திற்கே எழுந்தருளிய 'சத்குருவின்' மஹிமையை நினைத்துக் கலங்கி நின்றேன். இரண்டு 'சித்திர ரூபங்களுடனும்'... ஒரு சிறிய 'சிலா ரூபத்துடனும்' பாபா எழுந்தருளியிருந்தார்.

அந்த ஆலயத்தில் இருந்து அருள் வாக்கு நல்கும் 'திரு. ரெத்தினம் பூஜாரியாருக்கும்', அடியவனுக்கும் நெருக்கமான பக்தர், நண்பர் ' திரு ஜடாமுனி' என்றழைக்கப்படுபவரால்... 'சீரடியிலிருந்து'... மஹானின் திருவடிக்கமலங்களில் சமர்ப்பித்து... கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதையும் பூஜாரியார் பகிர்ந்து கொண்டார்கள்.

30 ஆம் திகதியன்றும் தரிசனத்திற்குச் சென்று 'மஹானின்' திருவடியிலும் திருவிளக்கேற்றி வழிபட்டு வந்தேன். இந்த அற்புதத்தை எனது துணைவியாருடனும், குழந்தைகளுடனும் பகிர்ந்து கொண்டேன். செயற்கையான 'தங்கநிறத் தாமரைகளைக்' கொண்டு மலர் மாலை செய்வதில் வல்லவரான... எனது துணைவியாரிடம்... வீட்டில் இருக்கும் 'ஸ்ரீ பட்டாபி இராம பகவானது' உருவப் படத்தினைக் காட்டி, அந்த அளவிற்கான இரண்டு மாலைகளையும்... அதில் பாதி அளவு உள்ள ஒரு மாலையும்... செய்து தருமாறு கேட்டுக் கொண்டேன்.

மாலைகளுடனும்... திருவிளக்கிற்கான நெய்யுடனும்... 6.11.2016, ஞாயிறு அன்று ஆலயத்திற்குச் சென்ற எனக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. ஆலயத்தின் நிர்வாகிகளின் ஒப்புதல் இந்த பிரதிஷ்டைக்கு எதிராக இருந்ததுதான்... அது. கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த பூஜாரியார் இந்தத் தகவலை தெரிவித்த போது... ஸாயீ மஹான்' இப்போது எங்கிருக்கிறார்... என்ற கேள்விக்கு... அவரை 'மடப்பள்ளியில்' வைத்திருப்பதாகக் கூறினார்.

முதலில் அதிர்ச்சி அடைந்தாலும்... என்னைச் சமாதானப் படுத்திக் கொண்டு... இது 'செல்லாயி அம்மனாலும்'... 'ஸாயீ மஹனாலும்' நடத்தப்படும் லீலைகளாகத்தான் இருக்க வேண்டும்... என்பதை உணர்ந்து கொண்டு... மடப்பள்ளியில் அமர்ந்துள்ள 'ஸாயீ மஹானின்' திருவுருவப் படங்களையும்... சிலா ரூபத்தையும்... தகுந்த பக்தர்களிடம் ஒப்படைத்து விடலாமே...! என்று கூறினேன்.

இதற்காகவே காத்திருந்தாற் போல்தான் பூஜாரியாரின் பதிலும் இருந்தது... 'இந்த முடிவைத்தான் நாங்கள் எடுத்துள்ளோம். 'வண்ணச் சித்திரத்தை', திருச்சி, தென்னூர், என்.ஸி பட்டணம் பொடி, காமாட்சி குடும்பத்தாரிடமும், 'சிலா ரூபத்தைத்' தாமும், 'கருப்பு வெள்ளை சித்திரத்தை' உங்களுக்கும் அளிப்பதாக முடிவு செய்துள்ளோம்...' என்ற போது... ஸாயீ மஹானின் கருணையை நினைத்து கண்ணீர் மல்கினேன்.

அடுத்தடுத்து... காட்சிகள் அரங்கேறின. மீண்டும் பிரகாரத்தில்... இறுதி ஆரத்திக்காக... அதே இடத்தில் 'பாபா' எழுந்தருளினார். அவரின் திருவடிகளில் திருவிளக்குகள் ஏற்றி... 'செயற்கைத் தங்கத் தாமரை மலர்களாலான' மாலைகளைச் சூட்டி... தட்டு நிறைய 'பால் பேடாக்கள்' சமர்ப்பித்து...  முறையான பூஜையும், நிவேதனமும், ஆரத்தியும் நிறைவேறின.

'திரு.ரெத்தினம் பூஜாரியாரின்' கைகளால் 'வண்ணச் சித்திரம் 'காமாட்சி குடும்பத்தினரிடன்' ஒப்பட்டைக்கப்பட்டது. 'திரு.சரவணன் பூஜாரியாரின்' கைகளால் அடியேனிடம் 'கறுப்பு வெள்ளைச் சித்திரம்' ஒப்படைக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்டு, திருச்சி. தில்லைநகர், சாஸ்த்திரி ரோடில் அமைந்துள்ள 'ஸ்ரீ சாரதை தாயாரின்' திருக்கோவிலில் நடைபெற்றுக் கொண்டிருந்த... 'கந்த சஷ்டி விழாவின்' இறுதி நாளான  'ஸ்ரீ முருக பகவானின் திருக்கல்யாண தரிசனத்திற்கு (6.11.2016 ஞாயிற்றுக் கிழமை)'
'ஸாயீ மஹானுடன்' சென்று... 'தெய்வயானி வள்ளித் தாயார் சமேத முருக பகவானைத்' தரிசனம் செய்தேன்.

வீட்டிற்கு வருமுன்னர்... துணைவியாரிடம் அலை பேசியில்...' நீ அன்புடன் கோர்த்த மாலையுடன், பாபாவும் சேர்ந்து நமது வீட்டுக்கு வருகிறார்...! தயாராக சிறிது, கல்கண்டுப் பால் நிவேதனத்திற்குத் தயார் செய்து வை...!!' என்று மட்டும் கூறினேன்.

வீட்டிற்கு வந்து... குடும்பத்தினர் அன்புடன் வரவேற்க... சுவாமி மடியில் சமர்ப்பித்து... முன்னறையில்... 'ஸ்ரீ பட்டாபி இராமர்' சித்திரத்திற்கு அருகிலேயே... சுவற்றில் 'ஸ்ரீ ஸாயீ மஹானை' பிரதிஷ்டை செய்தோம். நாங்கள் அனைவரும் ஆனந்தத்துடன் அவரை வீழ்ந்து வணங்கி... தூப, தீப ஆரத்திற்குப் பின் கல்கண்டுப் பால் நிவேதனம் செய்தோம்.

சீரடியிலிருந்து... இந்த எளிய பக்தனின் இல்லத்திற்கு... பாபா சித்திர ரூபமாக எழுந்தருளிய நாளான...' ஸ்ரீ முருகனின் திருக்கல்யாண நாளான' இந்த நாளை, ஒவ்வொரு வருடமும் 'கந்த சஷ்டி விழாவாகவே'... கொண்டாடி மகிழ்கிறோம். எனது மகள் இந்'சித்திர ரூப' மஹானுக்கு சூட்டிய பெயர்... 'ஸாயீ கந்தன்'.

இந்தப் பதிவையும்... அதே போன்ற, 'கந்த சஷ்டி விழாவின்' இறுதி நாளான... இன்றைய 'திருக்கல்யாண நாளில்தான்' (3.11.2019, ஞாயிற்றுக் கிழமை) பதிவும் செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவும் 'ஸாயீயின் லிலைகளில்' ஒன்றுதான்.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...