Saturday, November 9, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 32. 'யோகங்களும் அதை வழி நடத்தும் பூர்வ வினைகளும்' - 'புதாத்திய யோகம்'

யோகங்கள்... ஜோதிடக் கலையின் வல்லுனர்களுக்கும், ஆர்வலர்களுக்கும், பயனாளர்களுக்கும்... மிகவும் பிடித்தமான ஒரு அங்கம்.

தனது ஜாதகத்தில் யோகங்கள் ஏதும் அமைந்துள்ளதா...? என்ற கேள்வி எல்லா ஜாதகர்களுக்கும் எழுவது இயற்கைதான். அதற்கு முன், யோகம் என்றால் என்ன என்பதை... சற்று ஆய்வோம்.

ஒவ்வொரு ஜீவனுடைய வாழ்வும் இரகசியமானது. அந்த ஜீவனின் 'பூர்வ புண்ணிய வினைகளின் விளைவுகளை' அனுபவிப்பதற்காகவே... பிறவியை அடைகிறது. அந்த இரகசியத்தை... அந்த ஜீவனுக்கே... அடுத்தடுத்து மலரும் நொடிகளில்தான்... மலர வைக்கிறான்... படைப்பாளன்.

அந்த வாழ்க்கை இரகசியத்தை... பிரபஞ்சத்தில் உலவி வரும் கிரகங்களின் மூலமாக அறிந்து கொள்ளும் ஞானம்தான்.. ஜோதிடக் கலை. அவ்வாறு அமையும், 'கிரகங்களின் இணைவைத்தான்'... 'யோகம்' என்று கூறுகிறோம்.

இந்த 'யோகங்களின் அமைவு' ஜாதகரின் வாழ்வில்... அவரவர்களின் கர்ம வினைகளுக்கு உட்பட்டு... எவ்வாறு பயனளிக்கப் போகிறது...? என்பதைத்தான் இந்தத் தொடரில் ஆய்வதற்கு முற்படுகிறோம்... இறைவனின் அருளோடு...

'புதாத்திய யோகம்' :

அறிவுக்கும், புத்திக்கும் காரகத்துவம் வகிக்கும் 'புத பகவான்'... அங்கீகாரத்தை அளிக்கும் 'சூரிய பகவானுடன்' இணைந்திருப்பதே...'புதாத்திய யோகம்'.

இந்த யோகத்தை பெற்றிருக்கும் ஜீவனுக்கு... இந்தப் பிறவியில் அறிவும்... புத்தியும்... அதை பயன் படுத்தத் தேவையான அங்கீகாரமும் கிடைக்கும்... என்பதுதான், இந்த யோகம் அளிக்கும் பலன்.

ஆனால், இந்த யோகம் அமைந்த எல்லோருக்குமே... இதன் பூரண அனுபவம் கிடைத்துவிடுவதில்லை. அவரவர்களின் 'பூர்வ வினைகளுக்கு' ஏற்பவே இந்த அனுபவம் கிடைக்கிறது. இதை... அந்தந்த 'ஜாதகத்தில்' இந்த இணைவு அமைந்திருக்கும் நிலையைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

உதாரணமாக... 'தனுர் லக்னத்தில்' பிறந்திருக்கும் ஜாதகருக்கு... 'சூரிய - புத பகவான்கள்' இணைந்து... பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆமிடத்தில் அமைந்திருப்பதாகக் கொள்வோம். இந்த ஜாதகர் சிறந்த கல்விமானாக இருப்பார். தனது துறையில்... உயர் பட்டப் படிப்பை முடித்திருப்பார். அந்தத் துறையிலேயே... அரசு மற்றும் அரசு சார்ந்த துறையில்... உயர்  பதவியையும்  அடைவார். அறிவு சார்ந்த நிலையில்தான் இவரது வாழ்க்கைப் பயணம் அமையும்.

அதுவே... 'தனுர் லக்னத்தில்' பிறந்து... இந்த 'சூரிய-புத பகவான்களின்' இணைவு... 3 ஆமிடத்தில் அமைவதாகக் கொள்வோம். இந்த இடத்தில் 'மறைவைப்' பெறும் இந்த யோக அமைவு... ஜாதகருக்கு 'நிறைந்த கல்வி' என்ற அறிவுடன், புத்தியும் கூடியதுமான... நுட்பமான 'கலை' சார்ந்த கல்வி அனுபவத்தைக் கொடுப்பதாக இருக்கும். அந்தக் கலையில் நிபுணத்துதவத்தையும்... அதன் முலமாக ஜீவனத்தையும் அளிக்கும். ஆனால்... அதன் அங்கீகாரத்திற்காக போராட வேண்டியிருக்கும்.

இதைப் போல... ஏனைய யோகங்களையும் ஆய்வதற்கு முற்படுவோம்... ஒவ்வொன்றாக... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.



1 comment:

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...