அங்கம் ஹரே புலக பூஷ்ணமாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகாலாபரணம் தமாலம்
அங்கீக்ருதாகில விபூதிரபாங்க லீலா
மாங்கல்யதாஸ்து மம மங்கல தேவதாய :
'மலரிடம் நேயம் வைத்த வண்டுகள் போல... நீல மேகத்தைப் போன்ற திருமாலின் மேல் நீ வைத்த நேயத்தால்தான்... திருமால் நிறைந்த செல்வத்துக்கு அதிபதியாகிறார். அவர் மீது வைத்து அந்த அழகிய கண்கள் இரண்டையும்... அடியேனான என் மீதும் வைத்தாயென்றால்... கடல் மீது வாழும் அந்த திருமால் போல... உந்தன் கருணையால் செல்வம் பெற்று... கண் நிறைந்த வாழ்வைப் பெறுவேன். கமலத்தாயே ! கண் வைப்பாய் நீயே !!...'
இந்த சுலோகத்தை முதலாகக் கொண்டு 'பகவான் ஆதிசங்கரர்'... ஒரு எளிய, ஏழ்மை நிலையில் தத்தளித்த, ஒரு பெண்ணின் மீது கொண்ட கருணைதான்... 'கனகதாரா ஸ்தோத்திரமாக' மலர்ந்தது.
கண்களை மயக்கும் தோற்றம். நிறைந்த தேஜசுடன் கூடிய திருமுகம். உலர்த்திக் கட்டிய வஸ்திரம். தேகம் முழுவதும் முறையாகத் தரித்திருந்த விபூதி. தோளில் 'உஞ்ச விருத்திக்கான' சோலி. கைகளில் தாளக் கருவி. இந்த சுந்தர ரூபத்துடன்... வீதியில் நுழையும் சிறுவனைப் பார்க்கின்றாள் இந்தப் பெண்.
பகவானைச் சரணடைந்தவர்களுக்கான கடமைகளுள் மிக முக்கியமான கடமை...'உஞ்சவிருத்தி'. இந்த நிலையை அடைந்த மகன்னீயர்கள்... தமக்கான உணவுக்காக எந்த உடல் சிரமத்தையும் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. கிரகஸ்தாரர்கள் என்ற இல்லறத்தாரிடம் சென்று... பிக்க்ஷை ஏற்க வேண்டும்.
அதற்காக, ஒரு 'சோலி' என்ற நான்கு புறமும் சேர்த்து முடிச்சிட்ட ஒரு துணியை தோளில் சுமந்து... கைகளில் தாளக் கருவியுடன்... பகவானது ஸ்தோத்திரங்களை ஸ்மரித்தபடியே... ஒவ்வொரு வீட்டின் வாயிலில் நின்று... 'பகவதி பிக்க்ஷாந்தேஹி !' என்று மூன்று முறை அழைப்பது முறை.
சிந்தனை பகவானின் திருவடிகளில்தான் நிலைத்திருக்க வேண்டும். மூன்றாவது முறை, பிக்ஷைக்கு அழைத்த பிறகு... தாமாகவே அடுத்த இல்லறத்தாரை நோக்கி நகர்ந்து விட வேண்டும். யார் வருகிறார்கள் ? அவர்கள் எதை சோலியில் சேர்க்கிறார்கள் ? இது பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல்... உஞ்சவிருத்தியை பூரணம் செய்து... சேர்ந்த உணவுப் பொருள்களைப் பிரித்து... சமைத்து... அதை இறைவனுக்கு நிவேதனம் செய்து... பின்னர், தன் பசியை ஆற்றிக் கொள்வதுதான்...உஞ்ச விருத்தியின் மகிமை.
இதைத்தான்... அந்த சிறுவன் மேற்கொண்டிருக்கிறான். இந்தக் காட்சியைக் கண்ட இந்தப் பெண்ணுக்கோ பதைபதைப்பு. காரணம்... மிக ஏழ்மையான வாழ்வு... வீட்டிலே உணவுக்கென ஒரு தானியம் கூட இல்லாத வறுமை... தண்ணீரை மட்டுமே ஆகாரமாக உட்கொள்ளும் தன்னால்... அந்தச் சிறுவனுக்கு எதைக் கொடுக்க முடியும்...? அவனோ, ஒவ்வொரு வீடாக பிக்க்ஷை ஏந்தி... தனது வீட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறான்.
பதைபதைப்புடன் விட்டில், அங்கும்... இங்கும்... தேடிப் பார்க்கிறாள். என்றோ, சுவாமிக்கு நிவேதனம் செய்த, காய்ந்து... உலர்ந்த... சில நெல்லிக் கனிகள்... சுவாமியின் மடியில் இருப்பதைக் கண்டு... அதைக் கையில் அள்ளிக் கொண்டு... வாசலின் நிலைகளுக்குள்ளே மறைந்து நின்று பார்க்கின்றாள்.
அந்தப் பாலகனோ... முன் விட்டில் பிக்க்ஷையேந்திய பின்... தன் வீட்டை நோக்கி நடந்து வரும் ஓசை கேட்கிறது. இறைவனை மனதாரப் பிரார்த்திக்கின்றாள். 'ஓ, இறைவா ! இந்த பாலகனை நமது வீட்டைக் கடந்து போக வைப்பாய்... கையில் இருக்கும்... உலர்ந்த... காய்ந்து போன... எதற்கும் உதவாத... இந்த நெல்லிக் கனிகளையா... இந்த சிறுவனுக்கு அளிப்பது ? இறைவா, என்னைக் காப்பாய் !..' என்று கலங்கி நிற்கின்றாள்.
ஆனால், சிறுவனோ... அவள் வீட்டு வாசலில் வந்து நின்று... 'தாயே ! பகவதி பிக்க்ஷாந்தேஹி... !' என்று முதல் முறை அழைக்கின்றான்.
இவளின் நிலை 'இரு தலைக் கொள்ளி எறும்பாகத்...' தவிக்கிறது.
தனது வறுமையை, அண்டை வீட்டார்கள் அறியாதபடி இதுவரை பார்த்துக் கொண்டவளுக்கு... பிக்க்ஷையிட்ட அனைவரும், அவரவர் வீட்டின் வாயிற்படியில் நின்று... இந்த சிறுவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பது... பெரும் தடையாக இருக்கிறது.
விருத்திக்கான சோலியில் ஏதும் இட்டு... பின், அந்த பாலகனை விழுந்து வணங்கா விட்டால்... தனது வறுமை நிலை அனைவருக்கும் தெரிந்துவிடும்.
அந்தச் சோலியில், இந்தக் காய்ந்த நெல்லிக் கனிகளை சேர்த்தாலோ... சோலியை அவிழ்த்துப் பிள்ளை பார்க்கும் போது... இந்த நெல்லிக் கனிகளை இட்டவர்களை... நிந்திப்பானோ, என்ற கவலை ஒருபுறம்.
மீண்டும், வாசலில் பாலகனின் குரல்... இரண்டாவது முறையாகவும், பின் மூன்றாவது முறையாகவும்... ஒலிக்கிறது.
பதை பதைப்புடன், ஓடிச்சென்று... குனிந்த தலையுடன்... தொங்கும் சோலியில் யாரும் அறியாவண்ணம் அந்த உலர்ந்த கனிகளைச் சேர்த்துவிட்டு... மன்னிப்பு கேட்கும் தொனியில்... அந்தச் சிறுவனது பாதத்தில் வீழ்ந்து வணங்கிவிட்டு... வேகமாகத் திரும்பி வந்து... நிலைக் கதவுக்குப் பின் அழுதுகொண்டே நின்றிருந்தாள்.
அவளது கண்ணீர்... தனது பாதங்களில் சூடாக விழுவதை அந்தச் சிறுவன் உணர்கிறான். தனது சிந்தையை... பகவானின் திருப்பாதங்களிலிருந்து திருப்பி... தனது கண்களை மூடியபடி நின்ற அந்தப் பாலகனின் மனத்திரையில்... அந்த விட்டின் சூழல்கள் அனைத்தும் தெளிவாகத் தெரியக் கண்டான்.
பகவானை மனதில் நிறுத்தி... 'தாயார் மஹாலக்ஷ்மியிடம்...' அந்தப் பெண்ணுக்காக... கருணையுடன்... அந்தப் பாலகன் செய்த பிரார்த்தனைதான்... 'கனகதார ஸ்தோத்திரமாக...' அந்தப் பெண்ணின் வீட்டின் வாசலில் மலர்ந்தது.
சற்று நேரம் பிரார்த்திவிட்டு... அந்த சிறுவன் திருவாய் மலரும் அந்த 'சுலோகங்களை'... கண்களில் நீர் பெருகக் கேட்டுகொண்டிருந்தாள் அந்தப் பெண். சுலோகங்களை உதிர்த்துவிட்டு... அடுத்த விட்டை நோக்கி... பிக்க்ஷைக்காக நகர்ந்து விட்டான்... அந்தப் பாலகன். நிகழ்ந்த நிகழ்வுகளை எண்ணி... மனம் வருந்தி... சுவாமி மாடத்திற்கு முன்... அழுது நின்ற பெண்ணுக்கு காத்திருந்ததோ... ஒரு அதிர்ச்சி !
ஆம்... அவளது விட்டின் நடு முற்றத்தில்... குவியலாகக் குவிந்திருந்தது 'நெல்லிக் கனிகள்'. அருகில் சென்று பார்த்தபோது... ஆச்சரியத்தால் வியந்து போனாள். ஏனெனில், அத்தனையும்... 'தங்க நெல்லிக் கனிகள்'.
பக்தனின் நிலையை பகவான் அறிவான். அந்த நிலையை மாற்ற... பாகவதனை அனுப்பி வைப்பான்.
இதைத்தான்... 'ஆதிசங்கர பகவத் பாதர்' தமது வாழ்வில் நடத்திக் காடினார்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment